இலங்கை: காணாமல் போனோர் அலுவலகம் நடைமுறைக்கு வருகிறது

kanamal ponor panimanaiஇலங்கையில் காணாமல் போன நபர்கள் பற்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் வெள்ளிக்கிழமையன்று நடைமுறைக்கு வருகின்றது. இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி (Gazette) அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாத்திட்டிருக்கின்றார்.

இது தொடர்பாக தேசிய நல்லிணக்க மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் காணாமல் போன நபர்கள் பற்றிய அலுவலகத்தின் கடமைகள் , அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

2016ம் செப்டம்பர் மாதம் காணாமல் போன நபர்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும் நிர்வகித்தலும் பணிகளை நிறைவேற்றுதலும்) என்ற சட்டம் மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்ட போதிலும் நடைமுறைக்கு வராமை குறித்து குறிப்பாக சர்வதேச சமூகம் இது தொடர்பாக அதிருப்தி தெரிவிக்கும் கருத்துக்களை வெளியிட்டு வந்தன.

குறிப்பாக தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50வது கூட்டத் தொடரில் உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் அல் ஹுசைன், இந்த அலுவலகம் ஸ்தாபிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்து சுட்டிக்காட்டி விரைவாக நிறுவப்பட வேண்டும் என வலியுறுத்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil

TAGS: