காணாமல் போனோரின் கதியை சிறிலங்கா வெளிப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

RANIL-EU-TEAM-300x200சிறிலங்கா பல்வேறு பரப்புகளில் இன்னமும் மறுசீரமைப்புகளை செய்ய வேண்டியுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மை கண்டறியும் குழு சிறிலங்கா பிரதமரிடம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான தூதுவர் துங்- லாய் மார்கே தலைமையிலான, ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மை கண்டறியும் குழு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று பிற்பகல் சந்தித்து கலந்துரையாடிய போதே, இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரசெல்சில் இருந்து வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மை கண்டறியும் குழுவினர், 10 நாட்கள் சிறிலங்காவில் மேற்கொண்ட பயணத்தின் முடிவில் நேற்று சிறிலங்கா பிரதமரைச் சந்தித்திருந்தனர்.

“மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்கள், சுற்றாடல் தரநியமங்கள் போன்றவற்றில் சிறிலங்கா அரசாங்கம் முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது.

மனித உரிமைகளில் ஏற்பட்டுள்ள உண்மையான மாற்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு அரசாங்கத்தின் சிறந்த ஒத்துழைப்பு இருந்தது.

எவ்வாறாயினும், முக்கியமான விடயங்களில் உறுதியான முன்னேற்றத்தை வெளிப்படுத்த தவறியமை, இன்னமும் முக்கியமான கரிசனையாக இருக்கிறது.

சித்திரவதை நிறுத்தப்பட வேண்டும். இது முக்கியம். பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் கொடுத்திருந்தது.

போரின் முடிவில் காணாமல் போனவர்களின் கதி என்னவென்று தெளிவுபடுத்தப்பட வேண்டும்.” என்றும் இந்தச் சந்திப்பின் போது ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

-puthinappalakai.net

TAGS: