புதிய அரசியலமைப்பு, 13வது திருத்தச் சட்டத்தை விடவும் மேம்பட்டதாக இருந்தால் வரவேற்போம்: டக்ளஸ்

douglas_devananda“தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் புதிய அரசியலமைப்பானது,

நாம் கடந்த 30 வருடங்களாக கோரிக்கைவிடுத்துவரும் 13வது திருத்தச் சட்டத்தைவிடவும் மேம்பட்டதாக அமையுமாக இருந்தால், அதை வரவேற்போம்” என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை அரசியலமைப்பு சபையாக கூடியது. இதன் போது புதிய அரசியலமைப்பு தொடர்பான வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் உரையாற்றும் போதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ் மக்கள், தாம் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் இருப்பதற்காக உணர்வுகளுடன் இருந்ததை முன்னாள் தமிழ்த் தலைவர்களும் சிங்களத் தலைவர்களும் ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ளாததன் விளைவாகவே, எமது நாடு வெறுக்கத்தக்க வன்முறைகளையும் பிரச்சினைகளையும் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டது.

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தோடு நாம் தேசிய அரசியல் நீரோட்டத்திற்கு வந்தபோது, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவே அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கி முன்னேற முடியும் என்று நம்பினோம். அதையே எமது மக்களிடமும் கூறினோம்.

ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வு சாத்தியப்பட வேண்டும் என்றும், தமிழ் மக்கள் தாம் இலங்கையராக இருப்பதற்கு தமிழர் என்ற அடையாளத்தை இழக்க வேண்டும் என்றோ, தமிழராக இருப்பதற்கு இலங்கையர் என்பதை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றோ விரும்பவில்லை.

இலங்கையராகவும், தமிழராகவும் இந்த நாட்டில் சமத்துவத்துடனும், கௌரவத்துடனும் வாழவே விரும்புகின்றார்கள். எனவே பிரதமர், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காணவேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்வதை நாம் வரவேற்கின்றோம்.

முக்கியமாக புதிய அரசமைப்பானது, ‘மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி’ என்ற கோட்பாட்டுக்கு அமைவாக, இலங்கைத் தாய் நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமச்சீரற்ற அதிகாரங்களை வழங்குவதாக அமையவேண்டும். மேல்சபை அமையப்பெற வேண்டும், அதில் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகள் ஐம்பதுக்கு ஐம்பதாக இருக்க வேண்டும் என்றும், பொலிஸ் உட்பட முப்படைகளிலும் இனவிகிதாசாரம் பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசியலில் பெண்களுக்கு சமபங்கு வழங்கப்பட வேண்டும்” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: