சிறிலங்கா அதிபரிடம் விரைவான முன்னேற்றங்களை வலியுறுத்தினார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

zeid-raad-maithri-1சிறிலங்காவில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக இடம்பெற்று வருவதாகவும், முன்னேற்றங்களை நேரில் கண்டறிவதற்காக சிறிலங்காவுக்கு வருமாறும், ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில், சிறிலங்கா அதன் உடன்பாடுகளுக்கு ஏற்ப, மக்களின் நலனுக்காக மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருகிறது.

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகள் படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகின்றன.

இந்த செயற்பாடுகளை அவசரப்பட்டு முன்னெடுக்கும் போது,  கடும்போக்காளர்களே இலாபமடைவர்.  ஐ.நா மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு இரண்டு ஆண்டு காலம் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை,  நாட்டின் உள்ளக அரசியல் நிலவரங்களையும் அனைத்துலக அரசியல் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டே முன்னெடுக்க வேண்டும்.

இந்தப் பயணத்துக்கு முன்னதாக, காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டேன். அதன் நடவடிக்கைகள் செயற்திறனாக முன்னெடுக்கப்படும்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் படையினர் வசம் இருந்த  அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. வடக்கில் உள்ள காணிகளில் குறிப்பிடத்தக்களவு விடுவிக்கப்பட்டுள்ளன.

எஞ்சிய காணிகளும் நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு முறையாக மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டதுடன்,  சிறிலங்கா அடைந்துள்ள முன்னேற்றங்களை நேரில் கண்டறிவதற்காக அடுத்த ஆண்டு சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித ஆணையாளருக்கு சிறிலங்கா அதிபர் அழைப்பு விடுத்தார்.

அதேவேளை. இந்த விடயங்களில் சிறிலங்கா அடைந்துள்ள முன்னேற்றத்தை பாராட்டுவதாக குறிப்பிட்ட ஐ.நா  மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசேன் முன்னேற்றத்தை அடைந்து கொள்வதற்கான பயணம் மேலும் விரைவுபடுத்தப்படுமாயின் மகிழ்ச்சியடைய முடியும் என்று தெரிவித்தார்.

காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்குவதற்கு எடுத்த நடவடிக்கைகளை பாராட்டிய அவர், அந்த பணியகத்துக்கான நியமனங்களை மேற்கொள்ளும்போது அனைத்து இனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் நியமனங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் போது சிறிலங்காவுக்கு  முழுமையான உதவிகளை வழங்க ஐ நா மனித உரிமைகள் பேரவை தயாராகவுள்ளதாகவும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் உறுதியளித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

-puthinappalakai.net

TAGS: