தமிழரசுக் கட்சியை இல்லாமல் ஒழிக்கவென்று பரந்த அளவில் வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்வதன் மூலம் ஏனைய கட்சிகள் தம்மை வளர்த்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றனர். இந்த நம்பிக்கையானது எதிர்வரும் தேர்தலில் தெரியவரும் என்று ஒவ்வொரு தேர்தல்களிலும் நம்பி மண் கவ்வியது தான் மிச்சம். அரசுடன் சேர்ந்து தமிழரசுக் கட்சி தமிழர்களுடைய தீர்வுத் திட்டத்தை இல்லாமல் செய்ய முயற்சி செய்கிறது என்று விமர்சனத்தை ஏனைய தமிழ் கட்சிகள் தமிழரசுக் கட்சி மீது முன் வைக்கின்றனர். இந்த விமர்சனத்தை வைப்பவர்கள் யார் என்று பார்த்தால் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினருடன் இணைந்து பயணித்தவர்கள் என்பதை தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள்.
அதாவது மைத்திரி அரசுடன் இணக்க அரசியல் செய்யும் தமிழரசுக்கட்சி தமிழர் தீர்வு தொடர்பில் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது என்றதொரு விமர்சனத்தை வைக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அண்மையில் கொழும்பில் பத்திரிகையாளர் சந்திப்பினை ஒன்றை மேற்கொண்டு அந்த சந்திப்பில் கூட்டமைப்பின் முடிவினை தெளிவாகச் சொல்லி இருக்கிறார். அதாவது தமிழ் மக்களின் தீர்வினை ஒருபோதும் அடகு வைக்கமாட்டேன். என்று தமது நிலைப்பாட்டை தெட்டத்தெளிவாக சொல்லி இருக்கிறார்.
தீர்வு விடயத்தில் ஆறுதலாகத்தான் பயணிக்க வேண்டி இருக்கிறது. அவசரப்பட்டு பயனில்லை என்று சம்பந்தன் சொல்லி இருக்கிறார். போரால் ஈட்டமுடியாமல் இருந்ததை அரசியலால் ஈட்டுவது என்பது மிகவும் கஷ்ரம் தான் அதற்காக நாங்கள் விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால் அதற்கான பேச்சுகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். என்று மேலும் தெரிவித்துள்ளார். இதனை வைத்துக் கொண்டு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீர்வை பெற்றுக் கொடுத்து விடுவோம் என்று தமிழ் மக்களை நம்ப வைக்கலாம் என்று நினைக்கின்றனர். தமிழரசுக் கட்சியை கூடுதலாக விமர்சிப்பவர்கள் தாங்கள் பதவியில் இருக்கும் போது ஒன்றுமே செய்ய முடியாது இருந்தனர். இப்பொழுது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீர்வினை பெற்றுக் கொடுப்போம் என்று எந்த நம்பிக்கையில் தெரிவிக்கின்றனர்.
தீர்வினை வழங்குவதற்கு அரசு பின்னடிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் காரணமாக இருக்கிறது. அதாவது சம்பந்தன் தான் காரணமாக இருக்கிறார் என்று விமர்சிக்கின்றனர். இந்த கால கட்டத்தில் சம்பந்தனைப் போல் ஒரு அரசியல்வாதி இல்லை என்பது உண்மை. எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக சிங்கள மக்களின் எதிர்ப்பு அதிகமாக இருக்கிறதோ அதற்கேற்ப சிங்கள மக்கள் விரும்பும் அதேவேளை தமிழ் மக்களும் ஏற்கும் தீர்வினை பெற்றுக் கொடுக்க முயற்சி செய்கின்றனர். தீர்வு பின்தள்ளிப் போகிறது. இதற்கு காரணம் சம்பந்தன் என்று விமர்சனம் செய்பவர்கள் ஒன்றை மட்டும் புரி;ந்து கொள்ள வேண்டும். அதாவது ஆயுதப் போர் தோல்வி கண்ட நிலையில் அரசியல் என்பது கடுமையானதாக இருக்கிறது. இந்த அரசியலை நகர்த்துவது என்றால் தமிழித் தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே முடியும் என்பதை காலம் பதில் சொல்லும்.
மக்களை துன்பப்படுத்தி அரசியல் இலாபம் தேட நினைக்கும் ஏனைய தமிழ்க் கட்சிகள் சம்பந்தனை கூடுதலாக விமர்சிக்கின்றனர். மக்கள் இதுவரை காலம் இடம்பெற்ற துன்பங்கள் போதும் வாழ வேண்டும் என்று நினைக்கின்றார்கள். தமிழ் மக்களை மேலும் துன்பத்துக்குள் தள்ளி தமது அரசியல் இலாபத்தை அடைய நினைக்கும் கட்சிகளை மக்கள் விரட்டியுள்ளனர். புலிகள் புலிகள் என்று பேசி தாங்கள் வாழ்ந்து கொண்டு அப்பாவி தமிழ் மக்களை பலிக்கடாவாகிவிட்டு மீண்டும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆட்சிக்கு வரலாம் என்று நினைக்கின்றனர். தமது போலி முகத்தை காட்டுகின்றனர். எத்தனை தேர்தல் நடந்தாலும் அத்தனை தேர்தல்களிலும் இவர்களை தமிழ் மக்கள் விரட்டியடிப்பார்கள் என்பது உண்மை.
-tamilcnn.lk