கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு பிரதான கட்சிகள் இணங்கினால், நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையையும் பௌத்தத்துக்கான முன்னுரிமையையும் தொடர்ந்து தக்க வைத்திருப்பதைப் பரிசீலிக்க சிறுபான்மைக் கட்சிகள் தாயாராக இருக்கின்றன என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலி, வெகுணகொடவில் புதிய காவல்துறை விடுதியை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“இடைக்கால அறிக்கையின் முதலாவது பந்தியில் கூறப்பட்டுள்ளது போல, செனட் சபையை உருவாக்கி, எல்லா சமூகங்களினமும் மனித உரிமைகளை பாதுகாத்து, நீதித்துறை சுதந்திரத்தை உறுதிப்படுத்தி, போரினால் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தி, அதிகபட்சி அதிகாரங்களை பகிர்வதற்கு, ஐதேகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணங்கினால், நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையையும் பௌத்தத்துக்கான முன்னுரிமையையும் தொடர்ந்து தக்க வைத்திருப்பதைப் பரிசீலிக்க சிறுபான்மைக் கட்சிகள் தாயாராக இருக்கின்றன.
இதுபோன்ற இணக்கப்பாட்டுக்கு சிறிபான்மைக் கட்சிகள் முன்னொருபோதும் வந்ததில்லை.
தேசியப் பிரச்சினை தொடர்பாக இரு பிரதான கட்சிகளும் முட்டிக் கொள்கின்ற நிலையில், தாம் ஒருதலைப்பட்ச நிலைப்பாட்டை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று சிறுபான்மைக் கட்சிகள் கருதுகின்றன.
எனினும், .இடைக்கால அறிக்கையை பிரதான கட்சிகள் இரண்டும் ஏற்றுக் கொண்டால், நாட்டின் ஒற்றையாட்சிப் பண்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டோம் என்றும், பௌத்தத்துக்கான முன்னுரிமைக்கும் அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கூட்டு அரசாங்கம் தேவையானது. ஆட்சி மாற்றமும், கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்ததுமே, அரசியலமைப்பு மாற்ற முயற்சிகளுக்கு சாதகமாக அமைந்தது.
இடைக்கால அறிக்கையின் மூலம், இறுதியான தீர்வு ஒன்றைக் காண முடியும். இந்த அறிக்கை தொடர்பாக ஒக்ரோபர் இறுதியில் விவாதம் நடத்தப்படவுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.
-puthinappalakai.net