ரோஹிஞ்சா அகதிகளைத் தாக்கியவர்களால் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பு: மங்கள சமரவீர

Ronhingyasஇலங்கையின் நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்கள சமரவீர, சில பௌத்த பிக்குகளை உள்ளடக்கிய குழுவொன்றினால் மியன்மார் அகதிகள் தாக்கப்பட்டதைக் கண்டிப்பதாகத் தான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதன் முலம் அத்தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டிய அமைச்சர் சமரவீர, அகதிகள் மீது தாக்குதல் மேற்கொன்ற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன, மியன்மார் அகதிகளின் இலங்கை வருகை முதல் முறையாக 2008-ஆம் ஆண்டிலேயே தொடங்கியதாகத் தெரிவித்தார்.

ஆனால் அப்போது ஆட்சியிலிருந்து மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியாளர்கள் மீது இருந்த அச்சம் காரணமாக, ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள எவரும் முன்வரவில்லை என்று குற்றம்சாட்டிய அமைச்சர் சேனாரத்ன, அகதிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறினார்.

சம்பந்தப்பட்ட அகதிகள், விரைவில் ஐநா வின் அகதிகள் ஆணையம் மூலமாக வேறு நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

இதேவேளையில், இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ள மியான்மர் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் மீது அடிப்படையற்ற எதிர்ப்புக்களை வெளிப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, இலங்கை வழக்கறிஞர் சங்கம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த, அந்த சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் உதய ரோஹான் டி சில்வா, இந்த அகதிகள் விவகாரத்தில், அமைச்சர்கள் சிலர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

இதனால், மக்களிடையே குழப்பம் உள்ளதாகக் கூறிய அவர், எந்த அடிப்படையில் அகதிகள் இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த அறிவிப்பை அரசு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்த அகதிகள் இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இதுவரை இலங்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறிய அவர், இவ்வாறான எதிர்ப்புகள் காரணமாக இலங்கையில் வசிக்கும் சிங்களம் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான நல்லினகத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்தார்.

எனவே இந்த விடயம் தொடர்பாக தனது சங்கம் விரைவில் ஜனாபதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். -BBC_Tamil

TAGS: