புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் – கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன

புதிய அரசியலமைப்பு சமஷ்டிக்கான எந்த அடையாளத்தையும் கொண்டிருக்காது என்றும், ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு விவகார நிபுணருமான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன.

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பாக விளக்கமளிக்க கொழும்பில் நேற்றுமுன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“மக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும். இதனையே அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

ஆட்சிமுறைமைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், சமஷ்டியை திணிக்க முயற்சிப்பதாகவும் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால் புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு எந்த இடமும் கிடையாது. இப்போதுள்ள அரசியலமைப்புக்கு அப்பால் சென்று ஒருமித்த நாடு என்ற பதம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா ஒரே நாடாக- பிளவுபடுத்தப்பட முடியாத நாடாக இருக்கும். நாடு பிளவுபடுத்தப்படுவதை தடுப்பது மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக அரசியலமைப்பில் கூறப்பட்டிருக்கும்.

சமஷ்டிக்கான எந்த அடையாளமும் புதிய அரசியலமைப்பில் சுட்டிக்காட்டப்படவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றையாட்சி என்பது மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

பிரிவினைவாதத்துக்குத் துணைபோகும் எந்தப் பிரிவும் உள்ளடக்கப்படவில்லை.  எந்த மாகாணமும் தனி அலகுகளைக் கோரவோ, தனிநாட்டைக் கோரவோ, பிரிந்து செல்லவோ முடியாது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலும் எந்த மாகாணமும் செயற்பட முடியாது. 13ஆவது திருத்தச்சட்டத்தில் கூட இதற்கான இடமில்லை.

மாகாணசபையில் அதிபருக்கு சில அதிகாரங்கள் உள்ளன. முதலமைச்சர் அல்லது ஆளுனர் எல்லை மீறி செயற்படும் போது அவர்களின் அதிகாரங்களைப் பறிக்கும், ஆட்சியைக் கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு இருக்கும்.

ஒற்றையாட்சியைப் பலப்படுத்தும் வகையிலேயே புதிய அரசியலமைப்பு யோசனை அமைந்திருக்கிறது,

பௌத்த மதத்துக்கான முன்னுரிமை நீக்கப்படவுள்ளதாக ஒரு கருத்து பரவி வருகிறது. ஆனால் இடைக்கால அறிக்கையில் பௌத்த மதம் தொடர்பான இரண்டுவிதமான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பௌத்த மதத்துக்கு தற்போதுள்ள நிலையே தொடர்தல் மற்றும் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுத்தல் ஏனைய மதங்களுக்கு சம உரிமையைக் கொடுத்தல் ஆகியனவே அவை. இதுபற்றி ஆராய்ந்து ஏதேனும் ஒன்றை நடைமுறைப்படுத்த முடிவெடுக்கலாம்.

புதிய அரசியலமைப்புக்கான யோசனை பொதுவாக்கெடுப்புக்கு விடப்பட்டு மக்கள் ஏற்றுக் கொண்டால் தான் நடைமுறைப்படுத்தப்படும். இல்லையேல் கைவிடப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: