தமிழ் மக்களை நெருங்குவதற்காக இராணுவத்தை காட்டி கொடுத்து விட்டார் பசில் – சரத் பொன்சேகா

போரின் போதும் போருக்குப் பின்னரும், இராணுவத்துக்குள் உள்ள தனிப்பட்ட சிலரே குற்றங்களை இழைத்தனர் என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் கூறியிருப்பது, தமிழ் மக்களின் இதயங்களை வெற்றி கொள்வதற்கான அரசியல் தந்திரம் என்று சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கடந்தவாரம் யாழ்ப்பாணம் சென்றிருந்த பசில் ராஜபக்ச சிறிலங்கா படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், ஆனால் சில தனிநபர்கள் குற்றங்களில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,

“தமிழ் மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்காக பசில் ராஜபக்ச முழு இராணுவத்தையும் காட்டிக் கொடுத்துள்ளார்.

ராஜபக்சக்களை சிறுபான்மை மக்கள் வெறுப்புடன் நிராகரித்தனர். தேர்தல் முடிவுகளில் இது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது.  இந்த நிலையை மாற்றி, பாசத்தை காட்டுவதற்காக, இராணுவத்தைப் பயன்படுத்தியுள்ளார் பசில் ராஜபக்ச.

நாங்களும் கூட தமிழ் மக்களின் இதயங்களை வென்றிருக்கிறோம். ஆனால் நாங்கள் நியாயமான வழிமுறையைப் பயன்படுத்தினோம்.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவைக் குற்றம்சாட்டி  நான் வெளியிட்ட கருத்துக்கும், பசில் ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்துக்கும் இடையில் வேறுபாடு உள்ளது.

நான் ஒட்டுமொத்த இராணுவத்தையும் குற்றம்சாட்டவில்லை. யாரையும் பெயரைக் கூறாமல் குற்றம்சாட்டவில்லை.

ஒருவர் மீது தெளிவாக எனது குற்றச்சாட்டை சுமத்தியிருந்தேன். எழுந்தமானமாக தனிநபர்கள் என்று கூறவில்லை.

ஜெனரல் ஜயசூரியவுடன் இருந்த கோப்ரல் ஒருவரிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. போர் முடிவுக்கு வந்து இரண்டு வாரங்களின் பின்னரும் ஜெனரல் ஜயசூரிய குற்றங்களில் ஈடுபட்டிருந்தார் என்று அவர் எனக்குத் தகவல் வழங்கினார்.

ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டை நான் சுமத்திய போது, அதனைக் கடுமையாக விமர்சித்த தனிநபர்கள், அரசியல்வாதிகள், பிக்குகள் ஏன் பசில் ராஜபக்சவின் அறிக்கைக்குப் பின்னரும் மௌனமாக இருக்கின்றனர்?

என்னை விரோதியாக சுட்டிக்காட்டியவர்கள் மற்றும் போர் வீரர்களின் பாதுகாப்பிற்காக பேசியவர்கள் இன்று அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் இப்போது எந்த கண்ணீரும் சிந்தவில்லை.

குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். யாராவது குற்றவாளிகள் என்று அறிந்தால், அவர்கள் நீதிக்கு முன் கொண்டு வரப்பட வேண்டும்.

தவறு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், நாட்டுக்கு அவமானமே ஏற்படும்.

யாராவது ஒருவர் குற்றங்களைச் செய்ததற்கான ஆதாரங்களைத் மறைத்தால்,  அவர்கள் அதற்காக வெட்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

-puthinappalakai.net

TAGS: