போர்க்குற்றச்சாட்டு: ஐ.நாவுடன் பகிரங்க விவாதத்துக்கு தயார்! – இலங்கை இராணுவத் தளபதி அறிவிப்பு

“இலங்கைப் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் விவாதம் நடத்துவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.”

– இவ்வாறு  இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அறிவித்தார்.

கண்டியில் நேற்று அஸ்கிரிய, மல்வத்து ஆகிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“இராணுமானது எவ்வாறு ஒழுக்க விழுமியத்துடன் செயற்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையால் முன்வைக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கமையவே இலங்கை இராணுவம் இதுவரை காலமும் செயற்பட்டுவந்துள்ளது.

மேற்படி தராதரங்களை இராணுவம் எப்போதும் மீறியதில்லை. அப்படி ஏதேனும் சந்தேகங்கள் ஐ.நா. சபைக்கும், அந்தச் சபையின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இருக்குமாயின் அது தொடர்பில் தெளிவுபடுத்தி விவாதிப்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.

அதேவேளை, தேசிய பாதுகாப்பின் நிமிர்த்தமே வடக்கு, கிழக்கில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எனவே, எக்காரணம் கொண்டும் இராணுவ முகாம்களை அகற்றமுடியாது. தனிநபரின் உரிமைக்காக அன்றி ஒட்டுமொத்த மக்களினதும் பாதுகாப்புக்காகவே இராணுவம் போராடி வருகின்றது” என்றார்.

-tamilcnn.lk

TAGS: