உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல் நிலை கவலைக்கிடம்

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசமடைந்திருக்கும் நிலையில் எதிர்கட்சி தலைவர் கைதிகளின் நிலைமை குறித்து பாராமுகமாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் தங்களுடைய வழக்கை வவுனியா நீதிமன்றத்திலேயே விசாரிக்க வேண்டும் அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றக் கூடாது மற்றும் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்து அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த பன்னிரண்டு நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள நிலையில் கைதிகளில் இருவரின் உடல் நிலை மோசமடைந்து அனுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கைதிகளின் சிறநீரகங்கள் செயலிளக்கும் நிலையை அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கும் நிலையில் குறிப்பிட்ட கைதிகள் நீர் அருந்த மறுத்து உண்ணாவிரதத்தை தொடர்ந்துகொண்டுள்ளனர்.

தொடர்ந்து கருத்த தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்

உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை குறித்து ஜனாதிபதியுடன் இரண்டு தடவைகள் பேசியுள்ளேன். சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த காலத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப்போராட்டத்தை பொய்யான வாக்குறுதி வழங்கி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் முடிவுக்கு கொண்டு வந்திருந்தார்.

அவர் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக எந்த சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டினார். அத்துடன் தொடர் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல் உறுப்புக்கள் செயலிழக்கும் நிலையை அடைந்துள்ள நிலைiயில் கூட எதிர்க்கட்சி தலைவர் மௌனம் சாதிப்பது வேதனையளிக்கிறது என குறிப்பிட்டார்.

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக எதிர்வரும் திங்கக்கிழமை வவுனியா மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் தமிழ் அரசியல்கைதிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி அனந்தன் தெரிவித்தார்.

-tamilcnn.lk

TAGS: