இலங்கையில் போர் முடிந்து 8 ஆண்டுகள்: அறுவடை செய்யப்பட்டதா அமைதி?

யாழ்ப்பாணத் தெருக்களில் இருந்து துப்பாக்கி குண்டுகளின் சத்தமும் வெடி குண்டுகளின் சத்தமும் ஓய்ந்து இன்னும் நீண்ட காலம் ஆகிவிடவில்லை.

கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கை ராணுவம் வெற்றிகொண்ட 2009-ஆம் ஆண்டுதான் அந்தச் சத்தங்கள் யாவும் ஓய்ந்தன. குண்டு வெடிப்புகளும், மனிதர்கள் காணாமல் போவதும் அப்போதுதான் முடிவுக்கு வந்தது.

துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட உடல்கள் இப்போது தெருக்களில் சிதறிக் கிடக்கவில்லை. உள்நாட்டுப் போர் முடிந்து 8 ஆண்டுகள் ஆகிறது. யாழ்ப்பாணம் நிறையவே மாறிவிட்டது.

ஒரு அதிவிரைவு நெடுஞ்சாலை இப்போது யாழ்ப்பாணத்தை தலைநகர் கொழும்புவுடன் இணைக்கிறது. உணவு விடுதிகளும், பெறுவணிகக் கூடங்களும் உருவாகியுள்ளன.

இன்னும் ராணுவத்தினர் யாழ்ப்பாணத்தின் வீதிகளைக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டத்தையும் அங்கு பார்க்க முடிகிறது.

‘காணாமல் போனவர்கள்’

யாழ்ப்பாணத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, விடுதலைப் புலிகளின் தலைநகரமாக செயல்முறையில் இருந்த கிளிநொச்சியில் 207-வது நாளாக தனது போராட்டத்தைத் தொடர்கிறார் சிமி ஹட்சன்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு போராளியாக இருந்த அவரது மகனைப் போர் முடிந்த பின்பு காண முடியவில்லை.

இலங்கையின் வடக்குப் பகுதியில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

“போர் முடிந்த பின்பு, ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து என் மகன் கைது செய்யப்பட்டான்,” என்று தனது மகனின் பெரிய படத்தை வைத்துக்கொண்டு, கண்ணீருடன் கூறுகிறார் சிமி. “அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் அவனுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம்,” என்கிறார் அவர்.

அரசாங்கத்தின் ஒரு ரகசிய முகாமில் தன் மகன் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.

சிமி மட்டுமல்ல, காணாமல் போன தங்கள் மகன்கள் மற்றும் மகள்களின் படங்களை வைத்துக்கொண்டு, அங்கு சுமார் ஒரு டஜன் ஆண்களும் பெண்களும் ஒரு அழுக்கடைந்த கூரையின் கீழ் அமர்ந்துகொண்டு போராட்டம் நடத்திவருகிறார்கள்.

என்றாவது ஒரு நாள் தங்கள் அன்புக்குரியவர்களைப் பார்த்துவிடுவோம் எனும் நம்பிக்கை அவர்களைப் போராட வைக்கிறது.

மூவரின் படங்களை வைத்துக்கொண்டு பரமேஸ்வரி அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அவரது சகோதரர் நாதன், கணவர் ஜெய்சங்கர், அவரது சகோதரியின் மகன் சத்தியசீலன் ஆகியோர், போருக்குப் பின்னர் ‘காணாமல்’ போய்விட்டனர்.

அவர்களைக் கண்டுபிடிக்க பல அரசு மற்றும் சர்வதேச அமைப்புகளை அவர் நாடியுள்ளார். ஆனால், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

‘ராணுவ ஆக்கிரமிப்பில் நிலங்கள்’

சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முல்லைத்தீவில், கேப்பாப்பிலவு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிலங்களை இலங்கை ராணுவம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளதாகக் கூறி, அதற்கு எதிராகக் கூடியுள்ளனர்.

அந்தக் குற்றச்சாட்டுகளை அரசு மறுக்கிறது. “இல்லை. நாங்கள் எந்த விதமான ரகசிய முகாம்களையும் நடத்தவில்லை. தங்கள் உறவினர்கள் கொல்லப்பட்டதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை,” என்கிறார் அரசு செய்தித் தொடர்பாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனரத்ன.

“நாங்கள் நிலங்களை விடுவித்துளோம். ஆனால், அவை விடுவிக்கப்படுவதன் வேகம் குறைவாக உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்,” என்கிறார் அவர்.

இத்தகைய விளக்கங்கள் அம்மக்களின் உள்ளக் கிளர்ச்சியையும், மன வருத்தங்களையும் போக்கப் போதுமானதாக இல்லை. அதுவும் குறிப்பாக பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான விடயங்களில்.

“பொருளாதாரம் தற்போது சிக்கலில் உள்ளது. நாங்கள் தற்போது உப்பை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம். காலம் காலமாக இங்கு செயல்பட்டு வந்த சிமெண்ட் தொழிற்சாலைகள் இப்பொது இங்கு செயல்படுவதில்லை. கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த வளம் மிக்க நிலங்கள், ராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன,” என்று யாழ்ப்பாண சேம்பர் ஆஃப் காமர்ஸ் எனும் தொழில் அமைப்பின் துணைத் தலைவர் ஆர்.ஜெயசேகரன்.

“ஒரு நிரந்தர அரசியல் தீர்வுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் பதிலாக அமையும். நாங்கள் சுதந்திரமாக இல்லை. எங்களுக்கு இன்னும் கூடுதல் அதிகாரம் தேவை,” என்கிறார் அவர்.

யாழ்ப்பாண நகரின் தெருக்களில் இது ஒரு பரவலான கருத்தாக உள்ளது.

அதிகாரக் குவிப்பு

மாகாண அரசுகளுக்கு போதிய அளவில் பரவலாக்கப்படாமல், அரசின் அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

இந்தியாவைப் போலவே இலங்கையும் பல்வேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல் துறையினரை நியமிப்பது, நிலங்கள் விற்பனை மற்றும் வாங்குவதை பதிவு செய்வது ஆகிய அதிகாரங்கள் இலங்கை தேசிய அரசிடமே உள்ளன.

“மத்திய அரசையே மாகாண அவை அமைப்பு முறை சார்ந்துள்ளது. மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுவதால், நிர்வாக நடைமுறைகள் மூலம் மாகாண அவைகளை மத்திய அரசால் முடக்க முடியும்,” என்கிறார் வடக்கு மாகாண அவையின் உறுப்பினரான டாக்டர்.கே.சர்வேஸ்வரன்.

“தலைமைச் செயலாளர் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார். அவரையும் ஆளுநரையும் வைத்துக்கொண்டு ஜனாதிபதியால் ஆட்சி நடத்த முடியும்,” என்றும் அவர் தெரிவிக்கிறார்.

“இங்கு அமைதி இல்லை. வெளி நாடுகளுக்குச் சென்றவர்கள் இன்னும் திரும்பவில்லை,” என்கிறார் பேராசிரியரும், ‘Broken Palmyra’ (முறிந்த பனை) என்னும் நூலின் ஆசிரியர்களின் ஒருவருமான தயா சோமசுந்தரம்.

“மக்கள் இந்த அமைப்புமுறை மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் கேள்வி கேட்கிறார்கள். இதற்கு முன்பிருந்த அரசு, மக்களை தங்கள் உறவினர்களுக்காக துக்கம் அனுசரிக்கக்கூட அனுமதிக்கவில்லை,” என்கிறார் அவர்.

போர் முடிந்துள்ளதால் வாழ்க்கை இனி எப்படி இருக்கும் என்று கணிக்க முடிகிறது. ஆனால் , மக்கள் கடினமான கேள்விகளை எழுப்புகின்றனர்.

“இந்த சமூகம் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அடையும் முன்னேற்றம் அர்த்தமற்றதாக உள்ளது,” என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையின், துறைத் தலைவர் குருபரன்.

இங்குள்ளவர்கள் யாரும் மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்குத் திரும்ப விரும்பவில்லை. ஆனால், போருக்குப் பிந்தைய அமைதியின் முழுப் பலன்களையும் அடைய இலங்கைத் தமிழர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

-BBC_Tamil

TAGS: