எதிர்வரும் 2018, தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப் போகின்றது. முதலாம் காலாண்டுப் பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களோடு ஆரம்பிக்கும் தேர்தல் பரபரப்பு, மாகாண சபைத் தேர்தல்கள் வரையில் நீடிக்கும் வாய்ப்புண்டு.
அந்தக் காலப்பகுதிக்குள், புதிய அரசியலமைப்பு மீதான, பொது வாக்கெடுப்புக்கான சாத்தியமும் காணப்படுகின்றது.
தமது அரசியல் தலைமைத்துவத்தை, வாக்கு அரசியல் மூலமாகத் தேடிக்கொள்ள நினைக்கும் சமூகமொன்றில், தேர்தல்கள் செலுத்தும் தாக்கம் மிகப்பெரியது. அப்படியான கட்டத்தை தென்னிலங்கை 1950களின் ஆரம்பத்திலேயே அடைந்துவிட்டது. அவ்வாறான கட்டத்தை நோக்கியே, தமிழ்த் தேசிய அரசியலும் பயணத்தை மேற்கொண்டது. ஆனால், 1970களின் இறுதியில், தமிழ் இளைஞர்களின் அரசியல் வருகை, வாக்கு அரசியலுக்குள் மாத்திரம் தலைமையைத் தேடும் நிலையை அப்புறப்படுத்தி வைத்தது.
குறிப்பாக, ஆயுதப் போராட்டத்தின் நீட்சி, வாக்கு அரசியல் என்கிற கட்டத்தை கிட்டத்தட்ட முற்றுமுழுதாக அகற்றியிருந்தது. தேர்தல்களின் ஊடாக வெற்றி பெற்றவர்கள் கூட, தம்மைத் தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைகளாகச் சொல்லிக் கொண்டதும் இல்லை. 2009 மே 18இல், ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலுக்குள் முடக்கப்பட்டதும், தமிழ்த் தேசிய அரசியலும் மெல்லமெல்ல வாக்கு அரசியல் மூலமாகத் தமது தலைமையைத் தெரிவு செய்யும் கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. அதுதான், இன்றைக்கு விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைக் கட்சியாக வைத்திருக்கின்றது.
ஆக, ஆயுதப் போராட்டம் முடக்கப்பட்ட சூழ்நிலையில், புதிய அரசியல் தலைமைகளைத் தேடி அடைவது அல்லது புதிய தலைமைகளாக உருமாறுவது என்பது, வாக்கு அரசியல் ஊடாகவே அதிகமாகச் சாத்தியப்படும் சூழல் நிலவுகின்றது. உண்மையிலேயே இவ்வாறான நிலை, சமூகமொன்றின் ஆரோக்கியமற்ற தன்மையையே பிரதிபலிக்கின்றது. எனினும் யதார்த்தம், வாக்கு அரசியல் கோலொச்சுவதை முன்னிறுத்தும் போது, அந்தச் சூழ்நிலையை முற்றாகப் புறந்தள்ளிவிட்டு, புதிதாக ஓரிடத்திலிருந்து அரசியலுக்கான தலைமைத்துவத்தைக் கண்டடைவது அவ்வளவு இலகுவானதல்ல. ஆக, புதிய தலைமையோ அல்லது மாற்றுத்தலைமைக்கான கோசமோ, வாக்கு அரசியல் வழியாகவே தவிர்க்க முடியாமல் எழுந்து வர வேண்டியிருக்கின்றது. அதன்போக்கிலேயே, தேர்தல் புறக்கணிப்புக் கோசங்களை மக்கள் கண்டுகொள்ளாத நிலையையும் நோக்க வேண்டும்.
தமிழ்த் தேசிய அரசியலின் அடிநாதம் மக்களே; அவர்களின் உணர்வுகளை உள்வாங்கிய அரசியலே முதன்மையானது. சில நேரங்களில், மக்கள் பிழையான வழிகளில் செல்கின்றார்கள் என்று தோன்றினாலும், அவர்களோடு இணைந்து சென்றே, பிழையான வழியை அடையாளம் காட்டி, சரியான வழிக்கு அவர்களை அழைத்துவர வேண்டும். ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் கடந்த சில வருடங்களில் நிகழ்ந்தது, மக்கள் பயணிப்பது பிழையான வழியென்று சொல்லிவிட்டு, அப்படியே சம்பந்தப்பட்ட தரப்புகள் தரித்து நின்றமை. அந்தத் தரப்புகள், சரியான வழியைக் கண்டுபிடிக்கவோ, அதை நோக்கி மக்களை அழைத்துச் செல்லவோ முயலவில்லை. அதுதான், மக்களை அந்தத் தரப்புகளிடமிருந்து விலக்கி வைப்பதற்குக் காரணமானது.
எப்போதுமே மக்கள் அதிகம் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். அதுவும், முள்ளிவாய்க்கால் என்கிற கொடூரத்தைச் சந்தித்துவிட்டு, வந்திருக்கின்ற மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? அந்த மனநிலைக்குள், வலியும் ஆத்திரமும் ஆற்றாமையும் மாத்திரமல்ல, குழப்பமும் அதிகமாகவே இருக்கும். அந்த நிலையிலேயே, அரசியல் தலைமைத்துவம் என்பது குழப்பங்களிலிருந்து தெளிவின் பக்கத்துக்கு, மக்களை அழைத்துச் செல்லும் சக்தியையும் நம்பிக்கையையும் கொடுக்க வேண்டும். அவ்வாறான நிலையை, யாரும் உருவாக்காத நிலையில், எவராவது அழைத்துச் செல்லும் வழியில், மக்களும் பயணிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். அதுதான், இன்றைய நிலை. இது ஒரு வகையில் வாக்கு அரசியலைப் பலப்படுத்தி, அதனூடாகத் தலைமையை உறுதிப்படுத்தும் கட்டத்தை வந்தடைந்திருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வாக்கு அரசியலின் வழியே, ‘அரசியல் தலைமை’ என்கிற கட்டத்தை அடைந்திருக்கின்றது. அதன் வழியிலேயே, கூட்டமைப்புக்கு எதிராக, மாற்றுத் தலைமைக்கான கோசம் எழுப்பியவர்களும், பயணிக்க ஆரம்பித்திருப்பதைக் கடந்த சில மாதங்களாக அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக, அடுத்துவரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிறுத்திக் கொண்டு, தமது வேலைத்திட்டங்களை ஆரம்பித்திருப்பதைக் காண முடிகின்றது.
கூட்டமைப்பின் தலைமைக்கு, குறிப்பாக இரா.சம்பந்தனுக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் எதிரான அரசியல் கருத்தியலை, பெருமளவில் ஊக்குவிப்பதன் மூலம், அதிலிருந்து பயன்களை அடைந்துவிட முடியும் என்று கடந்த காலத்தில் முயற்சிக்கப்பட்டது. ஆனால், அது அவ்வளவு பயன்களை கொடுத்துவிடவில்லை. இந்த நிலையில், புதிய கட்டங்களின் ஊடாக, வாக்கு அரசியல் வழி, புதிய தலைமையாக உருவெடுத்தல் பற்றி, மாற்று அணிகள் சிந்தித்திருப்பதை முக்கிய கட்டமாகக் கொள்ள முடியும்.
குறிப்பாக, தேர்தல் புறக்கணிப்புக் கோசத்திலிருந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இறங்கி வந்திருப்பதையும், தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள் பலர், புதிய அரசியல் கூட்டணியொன்றுக்கான தொடர் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளதையும் காண முடிகின்றது. கடந்த காலத்தில், தாங்கள் தோல்வியடைந்த புள்ளிகள் என்று கருதும் இடங்களை அடையாளம் காணுவதோடு, புதிய அரசியலமைப்புக்கு வக்காளத்து வாங்கப்போகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, இடறி விழ வைக்க முடியும் என்றும் ‘மாற்று அணி’ கருதுகின்றது.
இங்கு மாற்று அணி என்கிற அடையாளத்துக்குள், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணைத் தலைவராக இருக்கும் தமிழ் மக்கள் பேரவை, கூட்டமைப்புக்குள் தமக்கான சரியான இடம் வழங்கப்படவில்லை என்று கருதும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் உள்ளிட்ட தரப்புகள், ஒரு சில வெளிநாட்டுத் தூதுவராலயங்கள், சில பத்திரிகை ஆசிரியர்கள், சில அரசியல் ஆய்வாளர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஒரு சில கல்விமான்களையும் கொள்ள முடியும்.
கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி வகிக்கும் ஏக நிலைக்கு எதிராக, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்தி, புதிய அணியொன்றை அமைத்துவிட முடியும் என்று, 2015 பொதுத் தேர்தல் காலத்திலிருந்து கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், விக்னேஸ்வரன் முன்னே வைத்த காலை, யாருமே எதிர்பார்க்காத அளவுக்குப் பின்னுக்கு இழுத்துவிட்ட புள்ளியில்தான், புதிய ஒருவரை வாக்கு அரசியலினூடு தலைமையாக முன்னிறுத்த வேண்டியேற்பட்டிருக்கின்றது. அதற்கான கடும் பிரயத்தனங்களைத் தான் தற்போது மாற்று அணி மேற்கொண்டிருக்கின்றது.
தமிழ்த் தேசிய அரசியலில், இப்போது இரு வேறு துருவங்களாக மாறியிருக்கின்ற விக்னேஸ்வரனும் சுமந்திரனும் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை பிரதானப்படுத்தி இறக்கப்பட்டவர்கள். விரும்பியோ விரும்பாமலோ கடந்த இரண்டு வருடங்களாக அந்த இருவரையும் முன்னிறுத்தியே வாதப் பிரதிவாதங்கள் அதிகம் நிகழ்ந்திருக்கின்றன. தமிழ்த் தேசிய அரசியலின் அடுத்த கட்டங்களைத் தீர்மானிக்கப் போகின்றவர்கள், அவர்கள் இருவரும்தான் என்கிற தோரணையே, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏற்படுத்தப்பட்டது. றோயல் கல்லூரியின் இன்னொரு பழைய மாணவரான கஜேந்திரகுமாரை, அரங்கிலிருந்து அகற்றுமளவுக்கு, விக்னேஸ்வரனும் சுமந்திரனும் முக்கியப்படுத்தப்பட்டார்கள்.
ஆனால், விக்னேஸ்வரனையோ சுமந்திரனையோ மாத்திரம் சுற்றிக் கொண்டிருப்பதாலோ அல்லது பிரதானப்படுத்தி அரசியல் உரையாடல்களை நிகழ்த்துவதாலோ அவ்வளவு பிரகாசமான வாய்ப்புகள் இல்லை என்கிற நிலையில், வாக்கு அரசியலில் பலமான அணியொன்றை உருவாக்கும் கட்டத்தை, மாற்று அணி தெரிவு செய்திருக்கிறது. உண்மையில், இது ஒரு வகையில் முக்கியமான முடிவுதான். ஏனெனில், இப்போது அந்த அணி, விக்னேஸ்வரனில் அவ்வளவுக்கு தங்கியிருக்கவில்லை. கிட்டத்தட்ட விக்னேஸ்வரனை அவர் போக்கிலேயே விட்டுவிடும் மனநிலைக்கும் வந்துவிட்டது. ஆக, அவர்கள் முன்னால் இப்போதுள்ள பிரதான விடயங்கள், யார் அந்த அடுத்த தலைமை? அந்தத் தலைமையை எங்கிருந்து தேடியடைவது? என்பதேயாகும்.
மாற்று அணி தமக்கான தலைமையை தாயகத்திலிருந்து தேடப்போகின்றதா அல்லது கூட்டமைப்பு, விக்னேஸ்வரன், சுமந்திரன் ஆகியோரை இறக்கியது போல, வேறு எங்கிருந்தாவது இறக்கப் போகின்றதா என்பதே இப்போது கவனம் பெறுகின்றது.
ஏனெனில், மாற்று அணிக்குள் இருக்கின்ற தரப்புகளுக்குத் தற்துணிவு மிகவும் குறைவு. தங்களுக்குள் ஒருவரைத் தலைமையாக முன்னிறுத்தும் அளவுக்கு அவர்கள் நம்பிக்கை பெறவில்லை. அல்லது, தன்னையே தலைமையாக மாற்றும் அளவுக்கான ஆளுமையையும் அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள் இல்லை. இது, தமிழ்த் தேசிய அரசியலின் பெரும் பின்னடைவு என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், தலைமைத்துவப் பண்புகளை அறியாத சமூகமொன்றாக ஏக நிலையொன்றுக்குள் தொடர்ந்தும் சுற்றிக் கொண்டிருப்பது, தனிநபர்கள் சார்ந்த அரசியலாகவே, இறுதிவரை தமிழ்த் தேசிய அரசியல் இருப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். அது, சம்பந்தனுக்குப் பிறகு, மாவை சேனாதிராஜாவையோ சுமந்திரனையோதான் மக்களுக்கு முன்னால் நிறுத்தும். மாறாக, புதிய தலைமைக்கான வழிகளை இறுதி வரையில் திறக்காது.
(புருஜோத்தமன் தங்கமயில்)
-puthinamnews.com