நீதி வழங்கும் செயற்பாடுகளை அரசியல்மயப்படுத்தக் கூடாது – ஐ.நா நிபுணர் எச்சரிக்கை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்கான செயற்பாடுகள், அரசியல் மயப்படுத்தப்பட்டால், நிலைமாறு கால நீதி செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட்டு விடும் என்று உண்மை, நீதி, இழப்பீடு மற்றும்  மீளநிகழாமையை உத்தரவாதப்படுத்துவது தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் எச்சரித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு இரண்டு வாரகாலப் பயணமாக வந்துள்ள ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப், நேற்று அனைத்துலக கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் சிறப்புரை ஆற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

“நீண்டகாலம் மோதல் நடைபெற்ற நாட்டில் நிலைமாறுகால நீதியை எவ்வாறு முன்னெடுப்பது, எவ்வாறு மீண்டும் இயல்பு நிலையைக் கொண்டுவருவது என்பது தொடர்பாக ஆராய்வதற்கான ஒரு பொறுப்பையே நான் வகிக்கின்றேன்.

மோதலின் பின்னரான ஒருநாட்டின் நிலைமாறுகால நீதி செயற்பாடுகள் மிகவும் முக்கியமானவை. அதில் அங்கம் பெறுகின்ற உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமை ஆகிய நான்கு காரணிகள் போருக்குப் பின்னரான ஒரு நாட்டின் சமூகத்திற்கு முக்கியமானதாக காணப்படுகின்றன.

இந்த நான்கு விடயங்களும் ஒன்றுக்கொண்டு தொடர்புபடுவதாகவும் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமைந்திருக்கின்றன.

நிலைமாறுகால நீதி செயற்பாடுகளுக்கு என்று  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வடிவம் கிடையாது. அந்தந்த நாடுகள் தமது சூழலுக்கு ஏற்ப போருக்குப் பின்னரான சமூகத்தின் நிலைமாறுகால நீதி செயற்பாடுகளை வடிவமைத்துக்கொள்ள முடியும். இதன் உள்ளார்ந்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டியது மிக முக்கியம்.

பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கி பயணிக்க வேண்டுமே தவிர தீர்வை உருவாக்கி விட்டு அதனை நாடி செல்லக்கூடாது. மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து ஆராயவேண்டும் என்பதுடன் மீறல்கள் தொடர்ந்து இடம்பெறாததை உறுதிப்படுத்தவேண்டியதும் அவசியம்.

உண்மையைக் கண்டறியும் செயற்பாட்டில் உலகில் எந்தவொரு நாடும் முற்றுமுழுதான வெற்றியைப் பெறவில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்டளவில் உண்மைகளை கண்டுபிடிக்க முடியுமான நிலை ஏற்பட்டது. இங்கு பாதிக்கப்பட்டோர் தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்கள் கவலையுடன் இருக்கின்றனர். எனவே முதலில் இங்கு நிலைமாறு கால நீதியை முன்னெடுப்பதற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். இதற்காக நாங்கள் முன்னோக்கிப் பயணிக்க வேண்டியது அவசியம்.

நிலைமாறுகால நீதி செயற்பாடுகளை பொறுத்தவரையில் அந்த செயற்பாடு நீதியானதாக இடம்பெறவேண்டும். அதிலிருக்கின்ற பண்புகளில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இங்கு நிலைமாறு கால நீதி செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல்வேறு வரையறைகளும் காணப்படுகின்றன.  ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இதில் சமூக நம்பிக்கை என்பது மிகவும் முக்கியத்துவமானது.  மாறாக தனிமையுடன் இந்த விடயத்தை சாதிக்க முடியாது.

இங்கு நிறுவன ரீதியான பங்களிப்புக்கள் மிகவும் முக்கியமானவையாக காணப்படுகின்றன. தவறான நோக்கில் மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து ஆராய்வதும் இங்கு மிக முக்கியமானதாகும்.

இந்த நிலைமாறுகால நீதி செயற்பாடுகளில் எவ்வாறு நாங்கள் பிரவேசிக்கின்றோம் என்பதும் இங்கு முக்கியமானதாக இருக்கின்றது. ஆனால் இந்த செயற்பாடுகளை ஒரு முறைமையுடன் செய்ய வேண்டியிருக்கின்றது.

பல்வேறு தரப்புக்களின் அனுபவங்களை எடுத்துப்பார்க்கும் போது முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் கருத்தியலில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

நீதி செயற்பாடுகளின் பல்வேறு விடயங்களை அமுல்படுத்துவதும் இங்கு மிக அவசியமானதாகும்.

முரண்பாடுகளை நீக்கிவிட்டு செயற்படுவதே இங்கு மிக உகந்ததாகவுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும். சட்டத்தை மதித்து இந்த செயற்பாடுகளை அமுல்படுத்தப்பட வேண்டும். இவை மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தாதவாறு அமைய வேண்டியது அவசியம்.

குறிப்பாக நிலைமாறுகால நீதி செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புமிக்க தன்மையும் மிகவும் அவசியமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சாதகமான முடிவுகளை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். குறிப்பாக சமூகமட்டத்தில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் அவசியமாகும். நிலைமாறுகால நீதி செயற்பாடு என்பது ஒரு மாயவித்தை அல்ல .

சமூகத்தில் காணப்படுகின்ற நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதற்கான ஆற்றல் இதற்கு இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இது வெற்றியை நோக்கியதான நடைமுறையாகும். சட்டத்தின் ஆட்சிப்படுத்தல், சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையைப் பலப்படுத்தல் என்பன இங்கு மிக முக்கியமானவையாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான கோணம் அவசியமானதாகும்.

இவை எல்லாவற்றுக்கும் முக்கியமானதாக நம்பிக்கை கட்டியெழுப்பப்படவேண்டும். சமூகங்கங்களுக்கிடையிலான நம்பிக்கையே நிலைமாறுகால நீதி செயற்பாடுகளில் மிக முக்கிய விடயமாக காணப்படுகின்றது.

ஆனால் நிலைமாறுகால நீதி செயற்பாடுகள் அரசியல் மயப்படுத்தப்படக் கூடாது. அவ்வாறு அரசியல் மயப்படுத்தப்பட்டால் அந்த செயற்பாடு தோற்கடிக்கப்பட்டு விடும்.

இது நீதிப் பொறிமுறை.  அரசியல் திட்டம் அல்ல என்பனை எப்போதும் உணர்ந்து கொள்ள வேண்டும். இங்கு நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானது என்பதுடன் நிலைமாறுகால நீதியை முன்னெடுப்பதற்கான எதிர்பார்ப்பு அவசியமானதாகும்.

கேள்வி – நிலைமாறுகால நீதி விவகாரம் ஏன் இந்தளவு அனைத்துலகமயமாகிறது?

பதில் – இந்த நிலைமாறுகால நீதி செயற்பாட்டு விடயத்தில் ஏனைய அனைத்துலக நாடுகளின் உதவிகளையும் அனுபவங்களையும் பெற்றுக்கொள்வதில் எவ்விதமான தவறும் இல்லை. அருகில் உள்ள நாடுகளிடமும் உதவியைப் பெறலாம்.

அதேபோன்று பூகோள ரீதியில் மிகவும் தூர இருக்கின்ற நாடுகளிடமும் கூட உதவிகளைப் பெறலாம். ஏனைய நாடுகளில் காணப்பட்ட அனுபவங்களை பெறலாம். குறிப்பாக தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற உண்மையை கண்டறியும் பொறிமுறையில் பல்வேறு உலக நாடுகள் அக்கறை செலுத்தின. அதாவது தென்னாபிரிக்காவிலிருந்து மிக தூர இருக்கும் நாடுகள் கூட இவ்வாறு அக்கறை செலுத்தின.

இவ்வாறு செயற்படுவதன் மூலம் மிக விரைவாக விடயங்களை அணுக முடியும் என்பது மிக முக்கியமானது. இந்த நீதி செயற்பாடுகளில் சிவில் சமூகத்தின் பங்களிப்பு மிக தீர்க்கமானது. நிலைமாறுகால நீதி செயற்பாடுகள் பரந்துபட்ட விடயம்.

அனைத்துலக உதவிகளைப் பெற முடியும் என்றாலும் கூட இதற்கான வடிவத்தை நாடுகளே தயாரித்துக் கொள்ளலாம். ஆனால் நிலைமாறு கால நீதி செயற்பாட்டின் அதிகளவான பணிகள் கள மட்டத்திலேயே இடம்பெற வேண்டும் என்பது மிக முக்கியமானது.

கேள்வி – இலங்கையில் போரை வென்ற பெரும்பான்மை சமூகம் இவ்வாறு நீதிப்பொறிமுறையொன்றை முன்னெடுப்பதை விரும்பவில்லை. அதேநேரம் பெரும்பான்மை மக்களின் சமூகத்தின் ஆதரவின்றி அரசாங்கத்தினால் பதவியில் நீடிக்க முடியாது. எனவே இவ்வாறான செயற்பாடுகள் எந்த நாட்டில் வெற்றி பெற்றுள்ளன என்று கூற முடியுமா?

பதில்-  நான் இப்போது சிறிலங்கா விவகாரம் தொடர்பாகப் பேசுவதற்கு எதிர்பார்க்கவில்லை. எனது மதீப்பீட்டை முடித்துக் கொண்டு திரும்புவதற்கு முன்பாக எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்து எனது மதிப்பீடுகளை வெ ளியிடவிருக்கின்றேன். அதுவரை பொறுமை காக்க வேண்டும்.

ஆனால் இங்கு ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது நிலைமைாறுகால நீதி செயற்பாடுகள் என்பன பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் நன்மை பயக்கக்கூடியது என கருத வேண்டாம். மாறாக அது முழு சமூகத்துக்கும் நன்மை பயக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

இந்த விடயத்தில் அரசியல் சம்பந்தப்படக்கூடாது. இது மிகவும் கவனமாகவும் சமநிலையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயமாகும். கவனமாக ஆராய்ந்து முடிவுகளுக்கு வரவேண்டும். யுத்தத்திற்கு பின்னரான நாட்டில் இது முக்கியமானது. நிலைமைாறுகால நீதி தவிர்க்கப்படக்கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள், வெளிநாட்டு உள்நாட்டு இராஜதந்திரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், முப்படைகளின் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் , அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

-puthinappalakai.net

TAGS: