இந்து ஆலயங்களில் மிருக பலி இடுவதற்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்து ஆலயமான கவுணாவத்தை நரசிம்மர் ஆலயம் தொடர்பிலான வழக்கு, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆலயத்தில் பத்தாயிரம் தொடக்கம் பதினைந்தாயிரம் வரையிலான மக்கள் கூடும் சமய விழாவில் முன்னூறு தொடக்கம் ஐநூறு வரையிலான கோழிகள், ஆடுகளை வெட்டி இறைச்சியாக்கி ஆலயத்தினுள் விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இதன்போது மன்றில் தெரிவித்துள்ளார்.
ஆலயத்தினுள் வேள்வி பூசைகளை நடாத்துவதற்கு சங்கானை பிரதேசசபை, தெல்லிப்பழை பிரதேசசபை, உடுவில் பிரதேசசபை, சண்டிலிப்பாய் பிரதேசசபை, கோப்பாய் பிரதேசசபை ஆகியன அனுமதி வழங்கியுள்ளதாக மன்றில் கூறிய நீதிபதி, இவ்வாறு அனுமதி வழங்குவதற்கு இறைச்சிக்கடை சட்டத்தை பயன்படுத்தியுள்ளமை கேவலமான விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இறைச்சிக்கடைச் சட்டம், மிருக வதைச் சட்டம், அரசியல் சட்டம் ஆகிய சட்டங்களின் படி ஆலயங்களில், மக்கள் கூடும் பொது இடங்களில் மிருகங்களை பலியிடல் குற்றச்செயலாகும் என்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கூறியுள்ளார்.
முன்னூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த சமய அனுஷ்டானமான மிருக பலியிடலை நிறுத்துவது சட்டப்படி தவறானது என கவுணாவத்தை நரசிம்மர் ஆலயம் சார்பில் நீதிமன்றில் கூறப்பட்டது.
இதன்போது விளக்கமளித்த நீதிபதி இளஞ்செழியன், இதற்கு இறைச்சிக்கடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இறைச்சிக்கடை சட்டத்திற்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீதிபதி மன்றில் கேள்வியெழுப்பினார்.
இறைச்சிக் கடை சட்டமென்பது இறைச்சிகளை விற்பனை செய்யும் சட்டமாகும். இதனை தவறாக புரிந்து கொண்டுள்ள வலிகாமம் பகுதி பிரதேச செயலாளர்கள் தான்தோன்றித்தனமாக அனுமதி வழங்கியுள்ளதாகவும் மன்றில் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
பிரதேச சபைகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் கோழிகள், ஆடுகளை வெட்டி, மக்கள் கூடும் பொது இடங்களில் சமூக சீர்கேட்டினை ஏற்படுத்தியுள்ளன.
2014ஆம் ஆண்டு வேள்வி பூசைக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்ட போதும், நீதவான் நீதிமன்றிற்கு அவ்வாறு அனுமதி வழங்க அதிகாரம் இல்லை என தெரிவித்த மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், இது தொடர்பில் மேல் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என்பவற்றுக்கே அதிகாரம் உள்ளதாகவும் மன்றில் சுட்டிக்காட்டினார்.
பொது இடங்களில் மிருகங்களை பலியிட முடியுமா என மன்றில் கேள்வியெழுப்பிய நீதிபதி, பேருந்து நிலையத்தில் மிருக பலியிட முடியுமா? யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானம் மக்கள் கூடும் பொது இடம். அங்கு மிருக பலியிட முடியுமா? தலதா மாளிகையில் 1 இலட்சம் மக்கள் கூடும் சமய நிகழ்வில் மிருகங்களை பலியிட அனுமதி கோர முடியுமா? உள்ளூராட்சி சபைகள் இதற்கு அனுமதி வழங்குமா? அதே போல் நல்லூர் ஆலய திருவிழாவின் போது மிருகங்களை பலியிட முடியமா? கிறிஸ்மஸ் நிகழ்வின் போது அந்தோனியார் கொச்சிக்கடை ஆலயத்தில் மிருகங்களைப் பலியிட முடியுமா என்றும் கேள்வியெழுப்பினார்.
எவ்வாறாயினும் யாழ்.மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட இந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின் போதும், ஏனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்களை பலியிடுவதற்கு முற்றாக தடை விதித்து உத்தரவிட்டார்.
இத் தடை உத்தரவை மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால் அது தொடர்பாக ஒரு பொதுமகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தால், அது தொடர்பாக உடனடியாக விசாரித்து குற்றமிழைத்தவரை கைது செய்து அருகிலுள்ள நீதவான் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
-puthinamnews.com