இரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதாசாரத்தில் முல்லைத்தீவில் இராணுவம் நிலைகொண்டுள்ளது: து.ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதாசாரத்தில் படையினர் நிலை கொண்டிருப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை விசேட கவனயீர்ப்பு அறிக்கையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

து.ரவிகரனின் கவனயீர்ப்பு அறிக்கையில், “முல்லைத்தீவு மாவட்டத்தில் 42,622 குடும்பங்களைச் சேர்ந்த 134,528 மக்கள் வாழ்க்கின்றார்கள்.

இலங்கையில் 243,000 இராணுவம் உள்ளனர். அதில் 60000 இராணுவத்தினர் முல்லைத்தீவில் உள்ளதாக ஆய்வுகளில் இருந்து தெரியவருகின்றது. வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகமான இராணுவத்தினர் நிலைகொண்டிருக்கின்றார்கள். 2 பொதுமக்களுக்கு 1 இராணுவ வீரர் என்ற வகையில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கஞ்சா கடத்தல் மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. அவற்றினைத் தடுப்பதற்கு எமது இளைஞர்கள் விழிப்புக்குழுவாக செயற்பட்டு மக்களை பாதுகாக்கப்பட வேண்டிய நிலைமை உள்ளது.

சனத்தொகையில் இராணுவத்தினர் அதிகமாக இருப்பதனால், யாரிடம் சென்று இவ்வாறான களவுகள் நடப்பதாக மக்கள் முறைப்பாடு செய்ய முடியும்? இளைஞர்கள் விழிப்புக்குழுவாக மக்களைக் காவல் காக்கும் விடயங்கள் கூட திசை திருப்பப்படுமா என்ற பயமும் உள்ளது. எனவே, சபை உரிய கவனத்தில் எடுத்து பொருத்தமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

-puthinamnews.com

TAGS: