“பிளவுபடாத பிரிக்கமுடியாத ஐக்கிய இலங்கையில் சமஷ்டி அரசமைப்பின் மூலம் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.”
– இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் அரசமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
“சமஷ்டியால் நாடு பிளவுபடும் என்ற பிழையான கருத்து பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் பரப்பப்பட்டுள்ளது. சமஷ்டிக் கோரிக்கையை முதலில் முன்வைத்தது பெரும்பான்மை இனத் தலைமைகளே” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழர்கள் இந்த நாட்டில் இரண்டாம் தரப் பிரஜைகள் அல்ல. ஆட்சியதிகாரத்தில் தமிழ் மக்களும் பங்கெடுக்கும்போதுதான் இலங்கையர் என்ற உணர்வு தோற்றம் பெறும்” எனவும் குறிப்பிட்டார்.
அரசமைப்பு நிர்ணய சபையில் நேற்று நடைபெற்ற புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“முதற்றடவையாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் புதிய அரசமைப்பு உருவாக்கும் செயற்பாட்டில் பங்கேற்றுள்ளன.
இடைக்கால அறிக்கையின் இப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளது. இந்த நாட்டில் பிரதான பிரச்சினையாக இருப்பது தேசிய இனப்பிரச்சினையாகும். தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்கின்ற ஒவ்வொரு கட்டத்திலும் இந்த இரண்டு பிரதான கட்சிகளும் எதிர்த்து வந்தமையே வரலாறு.
தற்போது இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இணைந்துள்ளன. இதுவொரு வரலாற்றுச் சந்தர்ப்பமாகும். இதனைச் சரியாகப் பயன்படுத்தவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
2015ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்போம், புதிய தேர்தல் முறைமையொன்றை ஏற்படுத்துவோம், தேசிய பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றை வழங்குவோம், புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதற்காகவே இந்த நாட்டில் 97 சதவீதமான மக்கள் ஆணை வழங்கியிருந்தனர்.
அந்த ஆணைக்கமைவாகவே நாடாளுமன்றத்தை அரசமைப்பு சபையாக மாற்றும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி அத்தீர்மானம் சபையில் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முழு நாடாளுமன்றமும் அரசமைப்பு சபையாக மாற்றப்படும் தீர்மானத்துக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளார்கள்.
தற்போது இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் அதற்கு எதிராக பகிரங்கக் குரல்கள் எழுப்புகின்றனர். குறித்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது பொது எதிரணி எதிர்ப்பை வெளியிட்டிருக்கவில்லை. ஆகக்குறைந்தது வாக்கெடுப்பைக் கோரியிருக்கலாம். ஆனால், அனைவரும் அதற்கு முழுமையான ஆதரவு வெளியிடுவதாகத் தெரிவித்தனர்.
தற்போதுள்ள அரசமைப்பில் புதிய அரசமைப்பொன்று கொண்டுவரக்கூடிய வரையறைகள் காணப்படுகின்றன. அரசமைப்பின் உறுப்புரை 74 மற்றும் 75 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள அந்த ஏற்பாடுகளுக்கமையவே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
2015ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் 1978ஆம் ஆண்டு அரசமைப்பானது பலதடவைகள் திருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தொட்டம் தொட்டமாக அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளமுடியாது. தேசிய இனப்பிரைச்சினைக்கான தீர்வு, அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. எமது ஆட்சி அமைந்து ஒருவருட காலத்தினுள் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயத்தையே நாம் தற்போது முன்னெடுக்கின்றோம். ஆனால், அவர்கள் இன்று எதிர்க்கின்றனர். நாங்கள் அனைத்து மதங்களையும் சமமாகவே மதிக்கின்றோம். அனைத்துக்கும் சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாகவுள்ளது. இருப்பினும், பெரும்பான்மையான பௌத்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் அல்லது தற்போதுள்ளமை போன்றே புதிய அரசமைப்பிலும் அமையவேண்டும் என்று விரும்புவார்களாயின் அதனை நாம் எதிர்க்கப்போவதில்லை. அதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், ஏனைய மதங்களுக்கான உரிய அங்கீகாரங்கள் வழங்கப்படவேண்டும்.
இலங்கை அரசு சமஷ்டி அரசாக இருக்கவேண்டும் என்று நாம் கோருகின்றோம். இதனால் நாடு பிரிவடைந்து செல்லப்போகின்றது என்று பிரசாரம் மேற்கொள்பவர்கள் ஒரு விடயத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும். இந்த நாட்டில் சமஷ்டி என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தியவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவே. இவர் 1926ஆம் ஆண்டு சமஷ்டி அரசு முறைமையை வலியுறுத்தி ஆறு கடிதங்களை எழுதியுள்ளார்.
பின்னர் 1944ஆம் ஆண்டு கம்னியூஸ்ட் கட்சியானது சமஷ்டி அரசு முறைமையை வலியுறுத்தியது.
இதற்கு முன்னர் டொனமூர் ஆணைக்குழுவில் இந்த நாடு மூன்று அலகுகளாக இருக்கவேண்டும். வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கனேடியத் தலைவர்களும் இரண்டு தடவைகள் சமஷ்டியை முன்வைத்துள்ளனர். இப்பீரியர் ஆணைக்குழுவிலும் சமஷ்டி முறை பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழர்கள் பிரிந்து செல்வதற்காகவே சமஷ்டியைக் கோருகின்றார்கள் என்பது தவறான அர்த்தப்படுத்தலாகும்.
தமிழர்களுக்கு முன்னதாக பெரும்பான்மையானவர்களே சமஷ்டி விடயத்தை வலியுறுத்தியுள்ளார்கள்.
சமஷ்டி என்பது பிரிந்து செல்லும் விடயம் அல்ல. இலங்கை நாடு ஒரு நாடாக இருக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அனைவரும் ஐக்கியமாகவும் சமத்துவமாகவும் நடத்தப்படும் சூழல் உருவாக்கப்படவேண்டும்.
இந்த நாட்டின் இறைமையானது ஒரு பெரும்பான்மையை மையப்படுத்தியதாக இருக்கக்கூடாது. இந்த நாட்டின் பிரஜைகள் அனைவரும் இறைமைக்கு உரித்துடையவர்கள்.
இந்த நாடு ஒன்றாக இருக்கவேண்டுமென்றால், ஆட்சியதிகாரத்தில் தமிழ் மக்கள் பங்காளர்களாக வேண்டும்.
முக்கியமாக அதிகாரங்கள் ஒரு தரப்பினரே பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்ற நிலையில், மற்றைய தரப்பினர் எவ்வாறு அவர்களுக்குத் தாங்களும் சமமானவர்கள் என்ற மனநிலை ஏற்படும். ஆகவே, அதிகாரங்கள் பகிரப்பட்டு அனைவரும் சமத்துவமானவர்கள் என்ற மனநிலையை உருவாக்கப்படவேண்டியுள்ளது.
தமிழ் மக்களாகிய நாங்கள் இரண்டாந்தரப் பிரஜைகள் அல்லர். தமிழ் மக்கள் இலங்கையர்கள் என்ற நிலை தோற்றுவிக்கப்படவேண்டும். கனடா, இலண்டன் எனப் பல இடங்களில் வாழும் தமிழ் மக்கள் தங்களை கனடா தமிழர்கள், லண்டன் தமிழர்கள் என்றே அடையாளப்படுத்துகின்றனர். அவர்கள் தங்களை இலங்கையர்கள் என்று அழைப்பதும் இல்லை; அடையாளப்படுவதுமில்லை.
13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டு மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. மாகாண சபை முறைமையை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்று முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்துகின்றார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனியே இக்கோரிக்கையை விடுக்கவில்லை. ஏனைய 7 மாகாண சபைகளும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.
13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக புறக்கோட்டையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட குழுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஈடுபட்டிருந்தார். ஆனால், தற்போது அவர் மாகாண சபைகளுக்கான தேர்தல் பிற்போடப்படுவதாகக் குற்றஞ்சாட்டுகின்றார்; போராட்டங்களை நடத்துகின்றார்.
இந்தியாவுக்குச் சென்றபோதும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற சந்தர்ப்பத்திலும் 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதோடு அதற்கும் அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்வதற்கு தயாராக இருப்பதாக மஹிந்த கூறியிருந்தார்.
அவ்வாறானவர் தற்போது ஒருமித்த நாடு என்ற சொற்பிரயோகத்தைப் பயன்படுத்தினால் நாடு பிளவடையப்போவதாகக் கூறுகின்றார். ஏக்கிய ராஜ்ய என்றால் ஒருமித்த நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிளவடையமுடியாத பிரிக்கமுடியாத நாடு என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் இதனை எதிர்ப்பவர்கள் ஒரு காலத்தில் எதற்கு இணங்கியிருந்தனர்.
இடைக்கால அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களிலும் பார்க்க எவ்வளவோ தூரம் சென்று பிராந்தியங்களின் ஒன்றியம் என்று குறிப்பிடப்பட்ட சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க முன்வந்தார்கள். பொதுஜன முன்னணி அரசில் இந்தச் சட்டமூலத்துக்கான அனுமதியும் பெறப்பட்டிருந்தது. இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மக்களின் பெரும்பான்மை ஆணையைப் பெற்றதொன்றாகும். எமது மக்கள் வழங்கிய ஆணைக்கு முரணாகச் செயற்படமுடியாது. தேசிய பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வழங்கப்படவேண்டும்; வடக்கு, கிழக்கு இணைக்கப்படவேண்டும்.
எமது மக்களின் உரிமைகளை அபிலாஷைகளை மறுக்கின்ற தீர்வை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. திருப்தியடைக்கூடிய தீர்வொன்று கிடைக்கப்படும் சமயத்தில் நாம் அதனைப் பெற்றுக்கொண்டு எமது மக்கள் முன்னால் செல்வோம். அதற்கு அவர்கள் அங்கீகாரம் அளிப்பார்கள்.
பலரும் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றபோதும் பொதுவான விடயங்களில் பொது இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ளவேண்டியுள்ளது. புதிய அரசமைப்புக்கான பணியில் இடைவெளியில் நாம் நிற்கின்றோம். இதனை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
எதிர்காலத்தையும் எதிர்கால சந்தியினரையும் கருத்திற்கொண்டு நாம் செயற்படவேண்டும்.
எதிர்கால சந்ததியினரை துன்பகரமான நிலைமைக்குத் தள்ளிவிடக்கூடாது. பிரதான கட்சிகள் இரண்டும் பொது இணக்கப்பாட்டுக்கு வரும் விடயங்களை ஏற்றுக்கொள்ளமுடியுமென்றால் நிச்சயமாக ஆதரவளிப்போம். இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது” – என்றார்.
-tamilcnn.lk