புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்ற அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பிக்குகளின் முறையற்ற தலையீடுகள் இருந்து வருவதாக அமைச்சரைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
“புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை தற்போது எதிர்ப்பவர்கள் எதிர்காலத்தில் வெட்கப்பட நேரிடும். சோபித தேரரின் இறுதிக் கிரியையில் பங்பேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக் காலத்தினுள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக உறுதியளித்தார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் இரண்டாவது நாளாக நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள். நாடு துண்டாடப்படுவதை தடுக்க பல காப்பீடுகள் இடைக்கால அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டை பிளவு படுத்தும் அரசியலமைப்பு உருவாக்கப்படுவதாக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
ஜே.ஆர்.ஜெயவர்தன பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி நிறைவேற்று ஜனாதிபதி முறையை கொண்டு வந்தார். தமது ஆட்சியில் அதனை இரத்து செய்வதாக சிறிமாவோ பண்டாரநாயக்க அறிவித்தார். நான் எந்த தலைவருடன் இருந்தாலும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை எதிர்த்தேன். 18வது திருத்தத்திற்கு கை உயர்த்தி பாவம் செய்து கொண்டேன். சந்திரிகா குமாரதுங்கவும் ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக வாக்களித்தார். மஹிந்த ராஜபக்ஷவும் இதே வாக்குறுதியை வழங்கினார். எவரும் அதனை செய்யவில்லை.” என்றுள்ளார்.
-puthinamnews.com