யாழ். வலிகாமம் வடக்குப் பிரதேச சபைக்குட்பட்ட வசாவிளான் மற்றும் பலாலி தெற்கு மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
“எம்மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள், துயரங்களை வெளிக்கொணர எமது மண் எமக்கானது என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து மக்களை ஒருங்கிணைத்து இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது” என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
வசாவிளான் கிராம முன்னேற்றச் சங்க முன்றலிலிருந்து ஆரம்பிக்கும் அமைதிப் பேரணி வசாவிளான் இராணுவக் குடியிருப்பு நுழைவாயிலை சென்றடையும். அங்கு வைத்து யாழ். கட்டளைத் தளபதிக்கான மகஜர் கையளிக்கப்படும்.
ஜனாதிபதிக்கு முகவரியிடப்பட்ட கடிதத்தின் பிரதியே யாழ். கட்டளைத் தளபதிக்கு அங்கு கையளிக்கப்படுவதுடன், பிரதமர், மீள்குடியேற்ற அமைச்சர், யாழ். மாவட்ட அரச அதிபர் மற்றும் வலிகாமம் வடக்குப் பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் இதன் பிரதிகள் நேரில் கையளிக்கப்படவுள்ளன.
“எமது நிலத்தை மீட்டெடுக்கும் முகமாக அரசுக்கும், படைத்தரப்பினருக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழுத்தம் கொடுக்கும் முகமாக தொடர் போராட்டங்களைப் பல்வேறு வடிவங்களில் முன்னெடுப்பதென்று செயற்குழுவில் இறுதி முடிவெடுக்கப்பட்டது.
மக்களின் அன்றாட வாழ்வாதாரமாக உள்ள விவசாய நிலங்கள் படைத்தரப்பால் வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்பட்டுவருவதுடன், மேலதிக தரிசு நிலங்களையும் விவசாய நிலங்களாக மாற்றி பயனடைந்து வருகின்றனர். மக்களின் வீடுகளில் படைத்தரப்பினரின் குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன.
தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த இடங்களை படைத்தரப்பு கையகப்படுத்தி வைத்திருப்பதானது எமது வாழ்விடங்களை சிதைப்பதற்கான வரலாறுகளை அழிப்பதற்கான மக்களின் சுதந்திரத்தை முடக்குவதற்கான ஒரு செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.
மூதாதையர் விட்டுச்சென்ற பணிகளையும் வழித்தடங்களையும் எதிர்கால சந்ததியினருக்கு எம்மால் எடுத்துச்செல்ல முடியாதுள்ளது. இடப்பெயர்வால் உண்டான மக்கள் அனுபவித்த அவலமும் வேதனையும் இந்த மீள்குடியேற்ற காலதாமதத்தால் மேலும் அதிகமாகியுள்ளது.
ஒருவருட காலமாக தொடர் பேச்சு, மனு கையளிப்பு எனப் பல நடவடிக்கைகள் படைத்தரப்பு மட்டத்திலும், அரச மட்டத்திலும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடமும் நேரில் முன்வைக்கப்பட்டபோதும் அதற்கான தீர்வையோ அல்லது அறிகுறிகளையோ அவர்கள் முன்வைக்கவில்லை.
ஆகவே, நியாயமான எமது கோரிக்கைகளில் அவதானம் செலுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே குறித்த விழிப்புணர்வுப் பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
எனவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உரிய தீர்வு சம்பந்தப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்படவேண்டும். தவறும் பட்சத்தில் தொடர் பேராட்டங்களைப் பல்வேறு வடிவங்களில் நடத்துவதில் கவனம் செலுத்தப்படும்.
எமது கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் முகமாக வசாவிளான் மற்றும் பலாலி தெற்கு மக்களுடன் சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொண்டு கிராமத்தின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்துமாறு அழைப்பு விடுக்கின்றோம்” என்று பேரணியின் ஏற்பாட்டாளர்கள் மேலும் கூறினர்.
-tamilcnn.lk