“இந்த நாட்டில் மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், எந்தவொரு காரணத்துக்காகவும் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது” என, இராஜங்க அமைச்சர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
புதிய அரசமைப்புக்கான அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசமைப்புச் சபையில் நேற்று (08) ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்றது.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,
“சிறுபான்மையின மக்களுக்கு உள்ள பாதுகாப்பாக, தற்போதைய ஜனாதிபதி ஆட்சி முறையை நாம் வரவேற்றோம். 1988ஆம் ஆண்டு முதல் சிறுபான்மை மக்களின் ஆதரவு, வாக்குகளுடனயே ஜனாதிபதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
“எங்களுடைய மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை அவர்களுடன் கலந்துரையாடி, ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் தீர்வுகளைப் பெற்று வந்திருக்கின்றோம். ஆதலால் எமக்கு, அதாவது சிறுபான்மை மக்களுக்கு தற்போதைய ஜனாதிபதி ஆட்சி முறை நன்மையளித்திருக்கிறது. ஆதலால், இந்த ஜனாதிபதி முறையை மாற்றுவதானது, சிறுபான்மையின மக்களுக்குத் தீங்காக அமையும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
“அத்துடன், வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பில் ஒருசாரார் கருத்துத் தெரிவித்துள்ளனர். வடக்கு, கிழக்கு இணைந்திருந்த போதுதான் கிழக்கில் இரத்த ஆறு ஓடியது. கிழக்கில் முஸ்லிம்கள் 42 சதவீதம் வாழ்கின்றனர். வடக்கு, கிழக்கை இணைப்பதன் ஊடாக நாம் அந்த மாகாணத்தில் சிறுபான்மை இனமாக மாறக்கூடிய சூழ்நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.
“மேலும், கிழக்கு மாகாணமானது சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் என அனைத்து இன மக்களும் வாழும் மாகாணமாகும். அங்கு எவரும் முதலமைச்சராக வரலாம். நாம் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
“நாம் எந்தவொரு காரணத்துக்காகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம். வடக்கு- கிழக்கை இணைத்து, மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கு புதிய அரசமைப்பின் ஊடாக வழிசமைத்துவிடக் கூடாது.
“வடக்கு – கிழக்கை இணைப்பதற்கு எந்தவொரு அடிப்படையான நியாயமும் கிடையாது. கிழக்கில் சிறப்பானதொரு ஆட்சி நடந்துகொண்டிருக்கின்றது. மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன். ஆனால், வடக்கு – கிழக்கை இணைப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
-tamilmirror.lk