“நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்களை ஏமாற்றுகிறது. அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைத் திருப்திப்படுத்துவதற்காக வெளித்தோற்றத்தில், உதவுவதுபோல் நடிக்கிறது” என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நாடாளுமன்றத்தில் நேற்று (13) தெரிவித்தார்.
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரைநிகழ்த்துகையில்,
“இந்த வரவு – செலவுத் திட்டத்தில் சலுகைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்ற போதிலும், அரசமைப்பின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையைப் போல, தெளிவில்லாமல் உள்ளது. வடக்குக்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட, முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கூட அவை, வெறும் காகிதங்களாக அல்லது வெறும் பெயர்ப்பலகைகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்துவிடக் கூடிய நிலையே காணப்படுகிறது” என்று தெரிவித்தார்.
அவரது இக்கருத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், நேற்று முன்தினம் தெரிவித்த கருத்துக்கு எதிரானதாகக் காணப்படுகிறது. அக்கருத்தில் அவர், வரவு – செலவுத் திட்டத்தில், கூட்டமைப்பின் கருத்துகள் உள்வாங்கப்பட்டதாகத் தெரிவித்ததோடு, வரவு – செலவுத் திட்டம் குறித்து, திருப்தியான மனநிலையையே வெளிப்படுத்தியிருந்தார்.
இதேவேளை, அரசாங்கம் மீதான விமர்சனத்தைத் தொடர்ந்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி, “இன்று எமது மக்கள், எத்தனையோ பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள். பிரச்சினைகளைத் தீர்க்குமாறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உரிய தீர்வு இந்த நல்லாட்சியில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான், ஆட்சி மாற்றத்துக்காக வாக்களித்தார்கள். ஆனபோதும், அது தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.
“கேப்பாப்புலவு மக்கள், தமது பூர்வீக நிலத்தை மீட்டுத்தருமாறு கோரி, 200 நாட்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்திவருகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள், கடந்த 8 மாதங்களாக நியாயம் கோரிப் போராடுகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்னவாயிற்று? அவர்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பதற்கான பதிலைக்கூட சொல்ல முடியாத நிலைமையில், அரசாங்கம் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர், “தமது வாழ்நாளைச் சிறைச்சாலையில் கழித்துக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை. அவர்களில் பலர் ஏன், எதற்காகக் கைது செய்யப்பட்டோம் என்பதைத் தெரியாமலேயே சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.
“தமிழ் மக்கள் மீது கரிசனை காட்டுவது போல் நடிக்கும் அரசாங்கம், மக்கள் எதிர்நோக்கியிருக்கும் இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதில் பின்னிற்கிறது
“பலவீனமான தேசிய இனமொன்றை, பலம்மிக்க மற்றுமொரு தேசிய இனம், தமது பலத்தைப் பயன்படுத்தி அடக்குவதற்கு முயலுமானால், தர்மம் அதற்கு இடம் கொடுக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
“தமிழ் மக்களுடைய பிரச்சினையில் அரசாங்கம், இதய சுத்தியுடன் நடந்துகொள்ள வேண்டும். நாம் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்போம் என உறுதியளித்து, மக்களின் ஆணையைப் பெற்றுத்தான் நாடாளுமன்றத்துக்கு வந்திருக்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்களிடம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தின்பிரகாரம் தான் நாம் செயற்பட வேண்டும். அதனை மீறி நாம் செயற்பட முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தன்னை வருத்திக் கொண்டு தேசிய அரசாங்கத்துக்கு நிபந்தனைகளற்ற ஆதரவுகளை வழங்கி வருகிறது” என்று தெரிவித்தார்.
-tamilmirror.lk