கூட்டமைப்பின் பாதை சரியா? – மக்களின் தீர்ப்பு முடிவு செய்யும் என்கிறார் சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லும் பாதை சரியானதா- இல்லையா என்பதை, மக்கள் முடிவு செய்வவதற்கான வாய்ப்பாக உள்ளூராட்சித் தேர்தல் அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எவ், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் அமைப்புகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, கொழும்பு ஊடகம் ஒன்றின் கேள்விக்குப் பதிலளித்துள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்,

“ஈபிஆர்எல்எவ் இன்னமும், கூட்டமைப்பை விட்டு வெளியேறுவதாக அதிகாரபூர்வமாக முறைப்படி அறிவிக்கவில்லை.

இந்தக் கட்டத்தில் பிளவுகள் இல்லாமல் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயற்படுவதையே நாம் விரும்புகிறோம்.

எனினும், கூட்டமைப்பில் இணைந்திருப்பதா – இல்லையா என்று முடிவெடுக்கும் உரிமை ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் பாதைக்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், கூட்டமைப்பின் பாதை சரியானதா- இல்லையா என்பதை மக்கள் தெரிவு செய்வதற்கான வாய்ப்பாக அமையும்.

மக்களின் தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்று பார்ப்போம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: