வவுனியாவிலுள்ள பாடசாலையொன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில், இலங்கை தேசிய கொடியை ஏற்ற வட மாகாண கல்வி அமைச்சர் எஸ். சர்வேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
வவுனியா – ஈச்சம்பெரியகுளம் பெரகும் மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று வட மாகாண கல்வி அமைச்சர் எஸ். சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் தொடக்கத்தில் வட மாகாண கல்வி அமைச்சரை தேசிய கொடி ஏற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் குறித்து வட மாகாண கல்வி அமைச்சர் எஸ்.சர்வேஸ்வரனிடம் கேட்டபோது, பல்லின மக்கள் வாழ்கின்ற இலங்கையின் தேசிய கொடியில் சிறுபான்மையினருக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை என்பதற்காகவே தான் தேசிய கொடியை ஏற்ற மறுப்பு தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் தேசிய கொடி சிங்கள பௌத்த மதத்தை பிரதிபலிக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மத்திய தமிழ் அமைச்சர் எதிர்ப்பு
வட மாகாண கல்வி அமைச்சர் எஸ். சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுத்துள்ளது, தமிழர்களின் தீர்வு திட்டத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் செயற்பாடு என கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தேசிய கொடியை ஏற்ற மறுத்துள்ளது, இலங்கை அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என கல்வி ராஜாங்க அமைச்சர் கூறினார்.
நாட்டில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது, இவ்வாறு செயற்படுவது ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
சட்ட நிபுணர் கருத்து
அரசியல் சட்டத்தின்படி அமைச்சரின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்று அரசியல் சட்ட வல்லுநர் ஜீ. ராஜகுலேந்திராவிடம் கேட்டபோது, தேசியக் கொடியை ஏற்ற அமைச்சர் மறுப்பது தவறு என்று சட்டத்தில் எந்தப் பிரிவிலும் சொல்லப்படவில்லை என்றார்.
ஆனால், மாகாண சபை உறுப்பினராகப் பதவியேற்ற நேரத்தில், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின்படிதான் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அப்படியிருக்கும்போது, இப்போது தேசியக் கொடி ஏற்ற மறுப்பது அர்த்தமற்றது என்று அவர் குறிப்பிட்டார்.
தேசியக் கொடி ஏற்ற விரும்பவில்லையெனில் அதை முன்னதாகவே நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் தெரிவித்திருக்கலாம்.
அமைச்சரின் இந்த நடவடிக்கையை, அரசியல்மயப்படுத்துவதற்கான முயற்சியாகவே பார்க்கிறேன் என்றார் ராஜகுலேந்திரா. -BBC_Tamil