வடக்கில் மீண்டும் ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களைத் தலையெடுக்க விடமாட்டோம் என்று சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள வாள்வெட்டுகள் போன்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க கருத்து வெளியிடுகையில்,
“உள்ளூர் பாதாள உலகக் குழுக்களை வெளிநாட்டில் இருந்து சிலர் கட்டுப்படுத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
வடக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், பாதாள உலகக் குழுக்களுக்கு எதிரான காவல்துறையினர் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கில் மீண்டும் ஆவா குழு தலையெழுப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. இந்தக் குழுவைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.
குற்றக் குழுக்களைக் கட்டுப்படுத்த சிறிலங்கா காவல்துறையின் முழுப் பலமும் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களில் வடக்கு மாகாணத்தில் 8 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக, யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவில் காவல்துறையினரின் அனைத்து விடுமுறைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
வடக்கில் குற்றங்களில் ஈடுபடும் குழுக்களுக்கு எதிரான எமது நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டிய தேவை இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
தப்பியோடிய நிசா விக்டர் மீண்டும் கைது
அதேவேளை, ஆவா குழுவின் தலைவன் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிசா விக்டர் எனப்படும், சத்தியவேல் நாதன் நிசாந்தன், நேற்று சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பியோடியுள்ளார்.
மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக கொண்டு சென்ற போதே அவர் நேற்றுக்காலை தப்பிச் சென்றுள்ளார்.
எனினும், பின்னர் நடத்தப்பட்ட தேடுதலின் போது கோப்பாய் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த போது நிசா விக்டர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.
மேலும் சிலர் கைது
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மேலும், சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
“கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எட்டு வாள்வெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 39 பேர் முன்னைய சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 25 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் இன்னமும் தடுப்புக்காவலில் உள்ளனர்” என்றும் அவர் கூறினார்.
-puthinappalakai.net