போர்க்குற்ற விசாரணை, அனைத்துலக பிரகடனங்களில் கையெழுத்திட சிறிலங்காவுக்கு அழுத்தம்

தெளிவான காலவரம்புடன் கூடிய போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும், ரோம், அனைத்துலக குற்றவியல் உடன்பாடுகளில் கையெழுத்திட வேண்டும் என்றும், சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சிறிலங்காவிடம் அனைத்துலக சமூகம் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான மூன்றாவது பருவகால, பூகோள கால மீளாய்வு அமர்வு கடந்த 15ஆம் நாள், நடைபெற்றிருந்தது. இந்த அமர்வில் உலக நாடுகளால் மேற்படி விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.

ஜோர்ஜியா – இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான காணிகள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண காணி சட்டங்களை மீளாய்வு செய்ய வேண்டும்.

ஜேர்மனி – 30/1 தீர்மானத்தை முழுமையான காலவரம்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும். சுதந்திரமான உறுப்பினர்களுடன், காணாமல் போனோர் பணியகத்தை செயற்படுத்த வேண்டும்.

கானா – வடக்கு, கிழக்கில் பெருமளவு காணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்குவது பற்றி ஆலோசிக்க வேண்டும்.

ஹெய்டி – புதிய அரசியலமைப்பு போதுமானளவு அதிகாரங்களை பகிரும் வகையில் அமைய வேண்டும்.

கனடா – பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும், பொதுமக்களின் காணிகள், மீளக் கையளிக்கப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும். பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்துக்கு அதிகமாக பணியாற்ற வேண்டும்.

இந்தியா – 13 ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்தோனேசியா – சித்திரவதைகள் தொடர்பான சகிப்பற்ற தன்மை மற்றும் மேலதிக சம்பவங்களைத் தடுப்பதற்கு நிறுவக ரீதியான கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

ஈரான் – குற்றப்புலனாய்வுப் பிரிவு, இராணுவம், காவல்துறையின் தடுப்புக்காவலில்,  இடம்பெறும் சித்திரவதைகளை தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஈராக் – சட்டத்தில் உள்ள பெண்களுக்கு எதிரான எல்லா பாகுபாடுகளையும் நீக்க வேண்டும்.

அயர்லாந்து – ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்துக்கு அமைய, இழப்பீட்டுக்கான பணியகம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கைகள் வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

இத்தாலி – சுதந்திரமான விசாரணை அமைப்பு ஒன்று, காணாமல்ஆக்கப்பட்ட சம்பவங்கள், சித்தரவதைகள் தொடர்பான எல்லா குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஜப்பான் – நல்லிணக்க செயல்முறைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு உதவ, எமது சிறப்பு சட்டவாளரை வழங்குகிறோம்.

லத்வியா- ரோம் பிரகடனத்திலும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற உடன்பாட்டிலும் கையெழுத்திட வேண்டும்.

மடகஸ்கார் – சித்திரவதைகளுக்குப் பொறுப்பான குற்றவாளிகளைத் தண்டிக்கும் உறுதியான நீதிப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

மலேசியா – பாலின வன்முறைகளுக்கு தீர்வு காண்பதற்கு வளங்களை ஒதுக்க வேண்டும்.

மாலைதீவு – பெண்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும்.

மெக்சிகோ –  அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமைகளை உறுதிப்படுத்தும், அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர வேண்டும். நிலைமாறுகால நீதி செயல்முறைகளின் வேகம் அதிகரிக்க வேண்டும்.

மொன்ரனிக்ரோ – தற்போது நடைபெறும் சித்திரவதைகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். பாதுகாப்புப் படையினரின் சித்திரவதைகள், பாலியல் மீறல்கள் தீவிர கவலையளிக்கின்றன.

மியான்மார் – தேசிய மனித உரிமைகள் செயற்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.

நமீபியா – அரசியலமைப்பு மறுசீரமைப்பு மூலம், அதிகாரப்பகிர்வுக்கு முயற்சிக்கும் சிறிலங்காவை வரவேற்கிறது.

நெதர்லாந்து – அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் நிலைமாறுகால நீதி செயல்முறைகள் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவது கவலையளிக்கிறது.

நியூசிலாந்து – 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

நிக்கரகுவா – முன்னாள் போராளிகளுக்கான மீள்குடியேற்ற மற்றும் இருப்பிட வசதிகளை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நோர்வே – ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை தெளிவான காலவரம்புடன் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

பிலிப்பைன்ஸ் – மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தேவையான நிதி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

போலந்து – மத ரீதியான வன்முறைகளைத் தூண்டுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். சித்திரவதைகளுக்கு எதிரான நெறிமுறைகளுடன் இணங்க வேண்டும்.

போர்த்துக்கல் – தடுப்புக்காவலில் சித்திரவதைகள் நடப்பதை தடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சித்திரவதைகளுக்கு எதிரான நெறிமுறைகளுடன் இணங்க வேண்டும்.

தென்கொரியா – காணாமல் போனோருக்கான பணியகம் சுதந்திரமாக செயற்படுவதற்கு பொருத்தமான வளங்களை அளிக்க வேண்டும்.

ரஷ்யா – தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் உருவாக்கம் வரவேற்கத்தக்கது.

தமிழர்களுக்கான பிரித்தானிய நாடாளுமன்றக் குழு – சித்திரவதைகள், குறித்து ஐ.நா விசாரணை நடத்த வேண்டும்.

சேர்பியா – பயங்கிரவாத தடைச்சட்டத்தை நீக்கி, அனைத்துலக சட்டங்களுக்கு அமைவான புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

சியராலியோன் – ஆயுதமோதல்களுடன் தொடர்புடைய வழக்குகளில், நீதித்துறைத் தீர்வுகளை வழங்குவதற்கு விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

சுலோவாக்கியா – சித்திரவதைகள், காவல்துறை வன்முறைகள் பற்றிய அறிக்கைகள் கவலையளிக்கின்றன.

ஸ்லோவேனியா – ரோம் பிரகடனத்திலும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலும் இணைந்து கொள்ள வேண்டும்.  அனைத்துலக நிபுணர்களின் உதவியுடன்  பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய  பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

தென்னாபிரிக்கா –  அரசியலமைப்பு மறுசீரமைப்பையும், விரிவான நிலைமாறுகால நீதி பொறிமுறையையும் உருவாக்க வேண்டும்.

ஸ்பெய்ன் – பலவந்தமாக காணாமல் போகச் செய்வதை குற்றவியல் சட்டத்தில் குற்றமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

பலஸ்தீனம் – ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

சுவீடன் – பலவந்தமாக காணாமல் போகச் செய்வதை  ஒரு குற்றமாக, சிறிலங்காவின் குற்றவியல் சட்டக்கோவையில் சட்டமாக்க வேண்டும்.

சுவிற்சர்லாந்து- சிவில் மற்றும் பொருளாதார விவகாரங்களில் இராணுவத் தலையீடுகள் இல்லாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். காணாமல்போனோர் பற்றிய முன்னைய எல்லா அறிக்கைகளும் வெளியிடப்பட வேண்டும். காணாமல்போனவர்கள் பற்றிய உறுதியான பட்டியலை வெளியிட வேண்டும்.

மசிடோனியா – சிறிலங்காவின் வடக்கில் அதிகரித்துள்ள எதிர்ப்புப் போராட்டங்கள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் போன்றவற்றில் முன்னேற்றங்கள் இல்லாதிருப்பதையும், விரக்தியையும் வெளிப்படுத்துகிறது. 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான குழப்பமற்ற காலவரம்பை பொருத்தமான வளங்களுடன் உருவாக்க வேண்டும்.

கிழக்கு திமோர் – ரோம் உடன்பாட்டிலும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற உடன்பாட்டிலும் இணைய வேண்டும்.

பிரித்தானியா – 30/1  தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான காலவரம்புடன் கூடிய செயற்திட்டத்தை உருவாக்க வேண்டும். சித்திரவதைகளுக்கு எதிரான நெறிமுறைகளுடன் இணைந்து கொள்ள வேண்டும். ரோம் உடன்பாட்டிலும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற உடன்பாட்டிலும் இணைய வேண்டும்.

அமெரிக்கா – மத வன்முறைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை தயாரிக்க வேண்டும். பாதுகாப்புப் படைகளால் நிகழ்த்தப்பட்ட  மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவதை உறுதிப்படுத்த வேண்டும். சிறிலங்காவில் தொடரும் பாதுகாப்புப் படைகளின் மீறல்கள் மற்றும் மத வன்முறைகள் பற்றிய அறிக்கைகள் கவலையளிக்கின்றன.

உருகுவே – சித்திரவதைகளுக்கு எதிரான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஆப்கானிஸ்தான் – சித்திரவதைகளுக்கு எதிரான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஆஜென்ரீனா – ஆயுதமோதல்களின் போதான உரிமை மீறல்கள் குறித்த தொடர் விசாரணைகள், பொறுப்புக்கூறல் மற்றும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு வழிவகுக்கும்.

அவுஸ்ரேலியா – பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும். 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நல்லிணக்கம், நிலைமாறு கால நீதி என்பனவற்றை சிறிலங்கா நிறைவேற்றுவது, நீண்டகால உறுதிநிலையை உறுதிப்படுத்தும்.

ஒஸ்ரியா-  பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத் தலையீடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இராணுவத்திடம் உள்ள பொதுமக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும். 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும், காலவரம்புடன் கூடிய செயற்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் மத்தியில் விரக்தி அதிகரித்து வருகிறது. ரோம் உடன்பாட்டில் இணைந்து கொள்ள வேண்டும். சித்திரவதைகளுக்கு எதிரான நெறிமுறையில் இணைய வேண்டும். சித்திரவதைகள் தொடர்வது கவலையளிக்கிறது. காணாமல் ஆக்கப்படுவதை குற்றமாக்குவதற்கான காலவரம்பை தெரியப்படுத்த வேண்டும்.

பெல்ஜியம் – மத சுதந்திரத்தை  பாதுகாப்பதற்கான முயற்சிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.  பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும்.

பிரேசில் – உண்மை, நீதி, இழப்பீடு, மீள நிகழாமையை ஊக்குவிப்பதற்கு மேலதிக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

சீனா – மனித உரிமைகள் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். சிறிலங்காவில் பொருளாதார அபிவிருத்தி ஏற்படுத்தப்பட வேண்டும்.

டென்மார்க் – சித்திரவதைக்கு எதிரான விருப்ப நெறிமுறையை உறுதிப்படுத்த வேண்டும். 30/1 தீர்மானத்தை, நடைமுறைப்படுத்துவதற்கு தெளிவான காலவரம்புடன் கூடிய திட்டத்தை வகுக்க வேண்டும்.

எஸ்தோனியா – ரோம் உடன்பாட்டுக்கு இணங்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும். போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதற்கான விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

பின்லாந்து – எவ்வாறு 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது என்பது குறித்த வீதிவரைவு ஒன்றுடன் கூடிய காலவரையறையை தயாரிக்க ஊக்கமளிக்கிறது.

-puthinappalakai.net

TAGS: