சிறிலங்கா இராணுவம் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று கூறுவது கோழைத்தனம் – சரத் பொன்சேகா

கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருந்த போது, சிறிலங்கா இராணுவத்தை அரசியல்மயப்படுத்தினார் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர்,

”கோத்தாபய ராஜபக்ச இராணுவத்துக்குள் அரசியல் செல்வாக்கைப் புகுத்த முயன்றதால், இராணுவம் இரண்டாக பிளவுபடுத்தப்பட்டது. இதுவும், மகி்நத ராஜபக்ச தனது அதிபர் பதவியை இழப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று.

இராணுவத்தில் பணியாற்றிய போது, கோத்தாபய ராஜபக்ச, ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய போன்றவர்கள், குற்றங்களில் ஈடுபட்டனர். இப்போது அவர்கள் இராணுவத்தின் பெயரைக் கெடுக்கின்ற போலி தேசப்பற்றாளர்களாக இருக்கின்றனர்.

மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்த போது இராணுவத்தை மதிக்கவில்லை. என்னை சிறையில் அடைத்தார். இன்னும் 35 இராணுவ அதிகாரிகளை இராணுவத்தில் இருந்து துரத்தினார்.

மகிந்த ராஜபக்சவின் தவறான முடிவுகளால், இராணுவத்தின் நற்பெயர் கெட்டுப்போனது. இராணுவ அதிகாரிகள் நம்பிக்கையிழந்தனர்.

2015இல் அவர் இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியைத் தக்க வைக்க முயன்றார். ஆனாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தைரியம் இந்த அரசாங்கத்துக்கு இல்லை.

இப்போது, ஓய்வுபெற்ற சில உயர் மட்ட இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுகின்றனர். அத்தகைய சில அதிகாரிகள், புதிய அரசியலமைப்புக்கு கைதூக்குவோரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களில் 95 வீதமானோர் தேசப்பற்றாளர்கள். அவர்கள் தாய்நாட்டுக்காக தியாகங்களை செய்துள்ளனர்.

ஆனால், இராணுவத்தில் கிட்டத்தட்ட 5 வீதமான சந்தர்ப்பவாதிகள் இருந்தனர். அவர்கள் இப்போது பல்வேறு அரசியல் குழுக்களின் பின்னால் செல்கின்றனர்.

இராணுவத்துக்கு எதிராக இப்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இராணுவம் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று கூறுவது கோழைத்தனமான செயல்.

தவறு செய்தவர்களைப் பாதுகாப்பது இராணுவத்தின் நற்பெயருக்கு நல்லதல்ல” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: