‘புதிய அரசமைப்பின் ஊடாக அச்சமின்றி வாழும் நிலை உருவாக்கப்படவேண்டும்’

“புதிய அரசமைப்பின் ஊடாக, சகல மக்களும் அச்சமின்றி உரிமையுடன் வாழும் நிலை உருவாக்கப்படவேண்டும். அனைத்து மக்களதும் சுயநிர்ணய உரிமை நிலைநாட்டப்பட்டு, உரிமையைப் பகிர்ந்து வாழும்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது” என, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசனின் பன்முப்படுத்தபட்ட நிதியொதுக்கீட்டில், ஏறாவூர்ப்பற்று பிரதேச விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (20) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 8 அமைப்புகளுக்கு 4 இலட்சத்து 60 ஆயிரம் பெறுமதியான உபகரணங்கள் கையளிக்கப்பட்டன. இந்நிலையில், தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீநேசன் எம்.பி கூறியதாவது,

“உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார் நிலையில் உள்ளது. எமது கட்சியானது, ஊழல், மோசடிகள், இலஞ்சம் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டவகையில், மக்களுக்கு இயன்ற விடயங்களை செய்துகொடுத்துள்ளோம். தேர்தலைக் குழப்பிக்கொண்டு யாராவது அரசியலில் தனிக்குடித்தனம் சென்றால் அவர்களுக்குரிய தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.

“இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைகளின் போது, அரசியல் யாப்பு வரைகின்ற விடயங்களில் கடந்த காலங்களில் தமிழ் தலைமைகள் எடுத்த முயற்சிகள் போதாது எனற குற்றச்சாட்டுகளை உள்நாடுகளிலும் வெளிநாடுகளிலும் அரசாங்கம் கூறிவந்துள்ளது. இவ்வாறு, இடைக்கால அறிக்கையைக் கொண்டுவருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டது.

“தமிழ் மக்கள் வாழுகின்ற பிரதேசத்தில் தங்களது விடயங்களை தாங்களே கையாளக் கூடியதாகவும் தமது அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் புதிய அரசியல் யாப்பு இருக்க வேண்டும்.

“மாகாணங்களுக்கு வங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு மீண்டும் பறித்துக்கொள்ளாத வகையில் சமஷ்டித் தன்மை கொண்ட ஓர் அரசியல் யாப்பு உருவாக்க வேண்டும் என்பதில் எமது தலைமைகள் செயற்படுகின்றன.

“அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கையை வாசித்து விளங்கிக் கொள்ளாமல் அவற்றைப்பற்றி வியாக்கியானங்களைக் கொடுப்பதைவிட ஆளமாக சிந்தித்து அறிந்துகொள்வதன் மூலமாக தெளிவை ஏற்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

-tamilmirror.lk

TAGS: