பல மாதங்கள் அல்ல; பல வருடங்களாக நீடித்து வந்த, உட்பூசலொன்றின் உச்சக் கட்டத்தை எடுத்துக் காட்டும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தேர்தல்களில் தனியாகப் போட்டியிடப் போவதாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கடந்த வாரம், பகிரங்கமாக நாட்டு மக்களுக்கு அறிவித்தது.
கடந்த 12 ஆம் திகதி, யாழ்ப்பாண பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தின் பின்னர், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தாம் ஏனைய ஒத்த கருத்துடைய குழுக்களுடன் சேர்ந்து, புதிய கூட்டணியொன்றை அமைத்து, இனி வரப்போகும் தேர்தல்களில் போட்டியிடப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முன்னர், கூட்டாகச் செயற்பட்டு வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, நீண்ட காலத்துக்கு முன்னரே கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று விட்டது. பின்னர், பிரேமசந்திரனும் பொன்னம்பலமும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கினர்.
ஆனால், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவராக
சி. வி. விக்னேஸ்வரன், உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அதன் தலைவராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். புதிய அரசியல் கூட்டணி அமைக்கும் விடயத்தில், விக்னேஸ்வரனின் கருத்துப்படியே, பேரவை இயங்குவதன் மூலம் அது தெளிவாகத் தெரிகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் சவாலாக, புதிய அரசியல் கூட்டணி அமைக்கும் விடயத்தில் பேரவையும் அதில் பங்காளியாக வேண்டும் எனப் பிரேமசந்திரனும் பொன்னம்பலமும் விரும்பினாலும், அதற்கு விக்னேஸ்வரன் இணங்கவில்லை.
பேரவை அரசியல் கட்சியாகவன்றி, மக்கள் இயக்கமாவே இயங்கும் என விக்னேஸ்வரன் தெரிவித்து இருக்கிறார். அதுவே பேரவையின் முடிவாகக் கருதப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சட்ட ரீதியாக ஒரு கட்சியாகக் கருதப்பட்டாலும், தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தின் பின்னர், கூட்டமைப்புக்குள் இரு பிரிவுகள் இயங்குவது எல்லோரும் அறிந்த தெளிவானதோர் விடயமாகும்.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் தலைமையிலான பிரிவும் விக்னேஸ்வரனின் தலைமையிலான பிரிவும் கடந்த 12ஆம் திகதி வடக்கில் இரண்டு இடங்களில் கூடின.
சம்பந்தனின் தலைமையிலான பிரிவு, தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவாக வவுனியாவில் ‘வன்னி இன் ஹோட்டல்’இலும் விக்னேஸ்வரனின் பிரிவு, தமிழ் மக்கள் பேரவையாக யாழ்ப்பாண நூலகக் கேட்போர் கூடத்திலும் கூடியிருந்தன. அவை தற்போதைய அரசமைப்புச் சீர்த்திருத்த நடவடிக்கைள் மற்றும் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறுவதாக அரசாங்கம் அறிவித்திருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளன.வவுனியாக் கூட்டம் காலை 10 மணி முதல் மாலை ஆறு மணி வரை எட்டு மணித்தியாலங்களாக நடைபெற்றதாகச் செய்திகள் கூறின.
யாழ்ப்பாணக் கூட்டத்தின்போது, பிரேமசந்திரன் போன்றோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கடுமையான விமர்சித்த போதிலும், விக்னேஸ்வரன் கூட்டமைப்பைப் பற்றி வித்தியாசமானதோர் கருத்தையே கொண்டிருந்தார்.
கூட்டமைப்பை உடைக்கக் கூடாது என்பதே, அப்போது, அவரது நிலைப்படாக இருந்தது. “தமிழ் மக்கள் பேரவை, எல்லாக் கட்சிகளிடமும் வலியுறுத்திக் கோருவது யாதெனில், எங்களுடைய தனிப்பட்ட கட்சி பேதங்களும் அதிகாரப் பேராசையும் தனிப்பட்ட விரோதங்களும் ஏகோபித்த தமிழ் மக்களுடைய அரசியல் நல உரித்துகளைப் பாதிக்க, நாம் அனுமதிக்கக் கூடாது” என்று அவர் தனது உரையில் கூறியிருந்தார்.
ஆனால், அவர் பொதுவாக விடுத்த கோரிக்கையொன்று, கூட்டமைப்பின் தலைமையையே நோக்கியதாக இருந்தது. “60 வயதைத் தாண்டிய தமிழ் தலைவர்கள், தலைமைப் பீடங்களில் இருந்து விலகி, இளம் தலைமுறையினருக்கு இடமளிக்க வேண்டும்” என்றும், “அடுத்த கட்டத் தலைமைக்கு, அரசியல் அறிவையும் அனுபவத்தையும் பெற இடமளிக்க வேண்டும்” என்றும் “தற்போதைய தலைவர்கள் தமிழ்நாட்டில் காமராஜரைப் போல், பின்னாலிருந்து அவர்களை வழிநடத்த வேண்டும்” என்றும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.
விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் பலர், தற்போது 60 வயதைத் தாண்டியவர்களாவர். ஆனால், கடந்த ஒரு சில வருடங்களாகக் கூட்டமைப்பின் தலைமைக்கும் அவருக்கும் இடையே நிலவி வந்த உறவைக் கருத்தில் கொள்ளும் போது, அவர் கூட்டமைப்பின் தலைவர்களைக் குறிவைத்தே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார் என்பது தெளிவாகிறது.
கடந்த இரண்டு வருட காலத்தில், தமிழ் மக்கள் பேரவை சாதித்தவற்றை விளக்கும் போது விக்னேஸ்வரன், “எமது இயக்கமானது சில கட்சிகளின் சிந்தனைகளில் வரவேற்கத்தக்க சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. அரசாங்கம் தருவதைத் தரட்டும், எம் மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்வார்கள் என்றிருந்த அரசியல் நிலைபோய், எவற்றையெல்லாம் எம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவற்றுக்கு இசைவாகவே நாங்கள் அரசியல் நடவடிக்கைகளை எடுத்துப் போக வேண்டும் என்ற ஒரு சிந்தனை மாற்றத்தை, தமிழ் மக்கள் பேரவை ஏற்படுத்திள்ளது” என்று கூறினார்.
எந்தக் கட்சியின் சிந்தனையில் பேரவை இந்த மாற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறுகிறார்? அந்தக் கட்சி எதுவாக இருக்க வேண்டும்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் கடுமையாக நடந்து கொள்வதில்லை என்ற கருத்தை கூட்டமைப்பின் போட்டியாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தெரிவு செய்யப்பட்ட சில ஊடகவியலாளர்களுடன் சம்பந்தன், அண்மையில் கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஒரு சந்திப்பை நடத்தினார். அப்போது அரசமைப்புச் சீர்திருத்தங்களைப் பற்றி விவரிக்கையில் அவர், “நாம் எமது மக்களின் கோரிக்கைகளை முன்வைப்போம். அது எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பது எமக்குத் தெரியாது” என்றார்.
இது, “எவற்றையெல்லாம் எமது மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவற்றுக்கு இசைவாகவே நாங்கள் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துப் போக வேண்டும்” என்ற விக்னேஸ்வரனின் கருத்தோடு ஓரளவுக்கு இசைந்து போகிறது. எனவே, இதைத்தான் தாம் ஏற்படுத்திய சிந்தனை மாற்றமாக, விக்னேஸ்வரன் கூறுகிறாரா?
சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்திய தமது சாதனையை எடுத்துக் காட்டுவதும், கூட்டமைப்பை உடைக்க வேண்டாம் என்ற அவரது கோரிக்கையும் ஒத்துப் போகிறது. அதாவது, கூட்டமைப்பு இப்போது திருந்தியிருந்தால் அதை உடைக்க வேண்டிய அவசியம் இல்லையே.
பேரவையின் மற்றொரு இணைத் தலைவரான ரி. வசந்தராஜாவும் கூட்டமைப்பைப் பிளவு படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உரையாற்றியிருந்தார்.
பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் மற்றும் டட்லி – செல்வநாயகம் ஒப்பந்தம் போன்ற தமிழ்த் தலைவர்களின் வரலாற்றுத் தோல்விகளை ஞாபகப்படுத்தி உரையாற்றிய அவர், தலைவர்களில் குறைப்பாடுகள் இருந்தாலும், தமிழர்களின் பாரம்பரிய கட்சியையோ கூட்டணியையோ பிளவுபடச் செய்யக் கூடாது என்று கூறியிருந்தார்.
ஆனால், இந்த உரைகளால் பிரேமசந்திரன், பொன்னம்பலம் ஆகியோரின் நிலைப்பாட்டை மாற்ற முடியவில்லை. அவர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, தாம் தனியாகப் போட்டியிடுவதாகப் பேரவையின் கூட்டம் முடிவடைந்தவுடன், ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர். அதற்காக, ஒத்த கருத்துடையவர்களுடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும் அவர்கள் கூறினர்.
இந்த நிலைமையை எதிர்பார்க்கத்தான் வேண்டும். ஏனெனில் தாம், கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தனியாகவே இனித் தேர்தல்களில் போட்டியிடுவதாகப் பிரேமசந்திரன் சில வாரங்களுக்கு முன்னரே அறிவித்து இருந்தார்.
பிரேமசந்திரன் தலைமை தாங்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதே, அதில் அங்கம் வகித்த கட்சிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனித்துத் தேர்தலில் போட்டியிடுவதாக விடுக்கப்பட்ட அறிவித்தலை, உடனடியாக ஏற்றுக் கொள்ள விக்னேஸ்வரன் விரும்பியதாகத் தெரியவில்லை. பேரவையின் கூட்டம் முடிவடைந்ததன் பின்னரும், அவர் கூட்டமைப்பு பிளவுபடக் கடாது என்ற நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்.
ஆனால், பின்னர் அவர், பிளவுக்குக் காரணம் கூட்டமைப்பே என்ற கருத்துப்படப் பேசியிருந்தார். “தாமே தயாரித்த தேர்தல் விஞ்ஞாபனங்களின் உள்ளடக்கத்தை, தான்தோன்றித்தனமாகக் கைவிடுவதற்கு எமது தலைவர்கள் முன்வந்தமையே, கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது” என அவர் கூறியிருந்தார்.
பேரவையின் கூட்டத்தை அடுத்து, பிரேமசந்திரன் குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தை ஒன்றின் காரணமாகவே, அவர் பிளவை நியாயப்படுத்தும் வகையில் இவ்வாறு கூறியிருக்கிறார் என யாழ்ப்பாணத்தில் வெளியாகும் பத்திரிகையொன்று, தனது ஆசிரியத் தலையங்கத்தில் குறிப்பிட்டு இருந்தது.
கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக பிரேமசந்திரன் விடுத்த அறிவித்தலை, கூட்டமைப்பின் தலைவர்கள் பெரிதாகப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே, இவர்கள் தமக்குச் சவால் விடுப்பதை விட, அவர்கள் வெளியேறுவதே மேல் எனக் கூட்டமைப்பின் தலைமை கருதியிருக்கலாம்.
எனவே, அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப் பிரிந்து செல்வதைத் தடுக்கும் முயற்சிகள் எதையும் செய்ததாகத் தெரியவில்லை. ‘போனால் போகட்டும்’ என்பதைப் போல் அலட்சியப்படுத்தியது. “கூட்டமைப்பின் செயற்பாடுகள் சரியா பிழையா என்பதை மக்கள் எதிர்வரும் தேர்தலில் முடிவுசெய்வார்கள்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கூறியிருந்தார்.
ஏனினும், கூட்டமைப்புக்குள் இருக்கும் தீவிரபோக்குடையவர்களை ஆத்திரமூட்டாத வகையிலும், அவர்கள் கருத்து வெளியிட்டு இருந்தனர். வெளியேறுவதற்கான
ஈ.பி.ஆர்.எல்.எப்பின் அறிவித்தலைப் பற்றி தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர், சம்பந்தனிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது, அவர் “அவ்வாறானதோர் முடிவை ஈ.பி.ஆர்.எல்.எப், கூட்டமைப்புக்கு தெரிவிக்கவில்லை; அவ்வாறு தெரிவித்ததன் பின்னர், அது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்” என்றும் கூறியிருந்தார்.
இது, சட்ட ரீதியான வாதமேயல்லாது, அரசியல் வாதம் அல்ல; ஈ.பி.ஆர்.எல்.எப்பின் வெளியேற்றம் சில வாரங்களுக்கு முன்னரே பிரேமசந்திரனால் அறிவிக்கப்பட்டு இருந்தது. பேரவையின் கூட்டத்தின் பின்னர், அதை அவர் பகிரங்கமாகவே மீண்டும் கூறியிருக்கிறார்.
அதனால்தான், தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் போது, அரசமைப்புச் சீர்திருத்தங்களைப் பற்றி விவரிக்கும் வேளையில், இந்த முக்கிய கட்டத்தில், தமிழ்க் கட்சிகளின் ஐக்கியத்தையும் சம்பந்தன் வலியுறுத்தினார்.
கொள்கையளவில் கூட்டமைப்பின் தலைமைக்கும் விக்னேஸ்வரன், பிரேமசந்திரன் ஆகியோருக்கும் இடையில் வேறுபாடுகள் இல்லை. எல்லோரும் சுயநிர்ணய உரிமை, சமஷ்டி, வடக்கு – கிழக்கு இணைப்பு, தன்னாட்சி போன்ற விடயங்களை வலியுறுத்துகின்றனர்.
“பெரும்பான்மையான தமிழ்க் கட்சிகள் யாவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டிய கருத்தையே தான் கொண்டுள்ளன” என்று விக்னேஸ்வரனும் கூறியிருக்கிறார்.
ஆனால், என்ன தொனியில் அவற்றை வலியுறுத்த வேண்டும் என்பதன் காரணத்தாலேயே அண்மைக் காலமாகத் தொடரும் சர்ச்சைகள் காணப்படுகின்றன.
கடும் தொனியில் பேச வேண்டும் என்பதே பிரேமசந்திரன் ஆகியோரின் நிலைப்பாடாக இருக்கிறது. அரசாங்கத்துடன் முட்டி மோதாமல், அரசாங்கத் தலைவர்களுடன் பேசி, வாதிட்டு உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் எனக் கூட்டமைப்பின் தலைமை கருதுகிறது.
இந்தச் சர்ச்சையில் கூட்டமைப்பின் நிலைப்பாடும், பிரேமசந்திரன் போன்றோரின் நிலைப்பாடும் தெளிவாக இருக்கின்றன.
ஆனால், சில விடயங்களில் விக்னேஸ்வரனின் நிலைப்பாடு, அடிக்கடி மாறுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
கூட்டமைப்பு பிளவு படக்கூடாது என்று பேரவையின் கூட்டத்தின் போது கூறியவர், பின்னர் சற்று வித்தியாசமாகப் பேசியிருப்பது ஓர் உதாரணம்.
சில வாரங்களுக்கு முன்னர், தமிழர்களுக்கு மாற்றுத் தலைமை வேண்டும் என்ற யோசனை ஊடகங்களில் உலாவிய போது, மாற்றுத் தலைமைக்கு அவசியம் ஏற்படவில்லை என்று விக்னேஸ்வரன் கூறினார். (அதற்கு ஈடாகும் வகையிலோ என்னவோ எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சம்பந்தன், “விக்னேஸ்வரனின் தரத்திலான முதலமைச்சர் ஒருவர் கிடைக்க மாட்டார்” என்று கூறியிருந்தார்.)
அவ்வாறு, “மாற்றுத் தலைமை அவசியமில்லை” என்று கூறிய விக்னேஸ்வரன், இப்போது, “60 வயதுக்கு மேற்பட்டோர் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்” என்கிறார்.
“இன்றைய தமிழ்த் தலைமைத்துவம், தோற்றுவிட்டோம் என்ற மனப்பாங்கில், பௌத்தத்துக்கு முதலிடம் கொடுக்கத் தயார்; ஒற்றையாட்சியின் கீழ், சிங்களப் பேரினவாதத்துக்குத் தொடர்ந்து இடம் கொடுக்க நாம் தயார்; வடக்கு, கிழக்கை இணைக்காது விட நாம் தயார்; தன்னாட்சி, தாயகம் போன்ற கோரிக்கைகளைக் கைவிடத் தயார்; சமஷ்டி முறை சாத்தியம் இல்லை என்று கூறி, ஒரு சில சலுகைகளை மட்டும் பெறும் வகையில் நடந்து கொள்வதால் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு ஏற்படப் பார்க்கிறது” என்றும் அவர் ஓர் இடத்தில் கூறுகிறார்.
அதேவேளை, “எமது இயக்கமானது, சில கட்சிகளின் சிந்தனைகளில் வரவேற்கத்தக்க சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது”என்று கூறினால், அது மிகையாகாது. “அரசாங்கம் தருவதைத் தரட்டும், எம்மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்வார்கள்” என்றிருந்த அரசியல் நிலைபோய், “எவற்றையெல்லாம் எம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவற்றுக்கு இசைவாகவே நாங்கள் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துப் போக வேண்டும் என்ற ஒரு சிந்தனை மாற்றத்தை தமிழ் மக்கள் பேரவை ஏற்படுத்திள்ளது” என்றும் கூறுகிறார்.
கூட்டமைப்பிலிருந்து, ஈ.பி.ஆர்.எல்.எப் பிரிந்து செல்வதால், கூட்டமைப்புக்கு எவ்வாறான பாதிப்பு ஏற்படும் என்பதை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போதே தெரிய வரும்.
தமிழர்களின் பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் பார்த்தால், அந்தப் பிளவால் தமிழ் மக்கள் பாதிக்கப்படப் போவதில்லை. ஏனெனில், வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பிரதேசங்களின் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இதனால் குறையப் போவதில்லை.
எந்தப் பிரிவு, எத்தனை ஆசனங்களை வென்றாலும் அந்த ஆசனங்களை வென்ற பிரதிநிதிகள் அனைவரும் அரசியல் ரீதியாக ஒரே கொள்கைகளைத் தான் வலியுறுத்தப் போகிறார்கள். ஆனால், மத்திய அரசாங்கம், சில விடயங்களின் போது, இந்தப் பிணக்குகளைக் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதேவேளை, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் அரசியல் சர்ச்சைகளால் மூடி மறைக்கப்படும் அபாயமும் இருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில், வட மாகாண சபை, எட்டுச் சட்டங்களை (statutes) மட்டுமே நிறைவேற்றியுள்ளது என்றும் தமிழ்த் தலைவர்களிடையிலான கருத்து முரண்பாடுகளின் காரணமாக, பல அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன என்றும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு கடந்த வாரம் தெரிவித்திருந்த கருத்தும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.
-tamilmirror.lk