தமிழ்த் தேசிய இனத்திற்காக குரல் கொடுத்துவரும் தலைவர்களின் வழியையே பின்பற்றினேன் – சர்வேஸ்வரன் விளக்கம்

கடந்த சில நாட்களாக தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் சிலரும், ஊடகங்களும் தேசிய கொடி விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவ்விடயத்தை அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் பற்றிப் பேசுவதைவிட, என்மீது சட்ட நடவடிக்கையை பிரதானப்படுத்துவதானது இவ்விடயத்தினை குறுகிய அரசியல் இலாபங்களுக்காக திசைதிருப்பி பூதாகாரப் படுத்துகின்ற போக்காகவே நோக்கமுடிகின்றது. எனவே இந்த விடயத்தில் வெளிவருகின்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து எனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

வவுனியா பரக்கும்ப மகாவித்தியாலயத்தில் வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜெயதிலக அவர்களின் நிதியொதுக்கீட்டில் மூவின மாணவர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்விற்கு என்னையும் அழைத்திருந்தார்.

இத்தகைய நிகழ்வுகளில் கொடியேற்றுவது ஒரு மரபல்ல. எனினும், கொடியேற்றும் நிகழ்வில் மாகாண கொடியை நான் ஏற்றுவதாகவும் அவ்வலயப் பணிப்பாளர் தேசியக் கொடியை ஏற்றுவார் எனவும் அதிபர் வழக்கம்போல் பாடசாலை கொடியை ஏற்றுவார் எனவும் குறிப்பிட்டேன். எனினும், மாகாண கொடி அங்கிருக்கவில்லை. பதிலாக பௌத்த கொடியே காணப்பட்டது. கௌரவ. ஜெயதிலக அவர்கள் பௌத்த கொடியை ஏற்றிவைத்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த நிகழ்வான பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த கோவிலில் வணங்குவதற்கு அழைக்கப்பட்டோம். வெளியில் பாதணிகளைக் கழற்றிவிட்டு மலர் தட்டுடன் சென்று புத்தபெருமானை வணங்கி மலர்தூவி அர்ச்சனை செய்தேன்.

நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாகவே நடைபெற்றன. முடிவில் அதிபர் பல்வேறு ஆசிரியர்கள் ஆகியோருடன் அளவலாவி பாடசாலையினதும் ஆசிரியர்களினதும் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து அவர்களது கோரிக்கைகளையும் பெற்றுக்கொண்டு அவர்கள் இன்முகத்துடன் வழியனுப்ப அங்கிருந்து விடைபெற்றேன்.

எனவே, இந்த விடயம் அந்தப் பாடசாலை நிகழ்வில் ஒரு பிரச்சினையாக எழவில்லை. எனினும் சில ஊடகங்கள் அங்கு சலசலப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிடுவது உண்மைக்கு முற்றிலும் புறம்பானதாகும்.

இவ்விடயம் தவறாகத் திரிபுபடுத்தப்பட்டு நான் தேசியக் கொடியை அவமதித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இது முற்றிலும் தவறானதாகும். தேசிய கொடியை சேதப்படுத்தினாலோ, அல்லது அதனை ஏற்றவிடாமல் தடுத்தாலோ அது அவமதிப்பதாகும். மாறாக, எனது சார்பில் எமது உயரதிகாரியை அதனை ஏற்றும்படிப் பணித்ததுடன், அது ஏற்றப்படும்போது உரிய கௌரவத்தையும் அளித்தேன்.

இலங்கையில் தேசியக் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் இன்றுவரை தமிழ்த் தேசிய உணர்வுடைய எவரும் இக்கொடியினை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வா முதல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் மற்றும் இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர் அண்ணன் மாவை சேனாதிராஜாவரை தமிழ் மக்களின் இத்தகைய உணர்வையே பிரதிபலித்து வருகின்றனர்.

புதிதாக தமிழ்த் தேசிய அரசியலுக்குள் பிரவேசித்த சிலரைத் தவிர, பாராளுமன்ற உறுப்பினர்களும்சரி மாகாணசபை உறுப்பினர்களும் சரி மூவின மக்களையும் சமமாகப் பிரதிபலிக்காத சிங்கள பௌத்த மேலாதிக்கத்தைப் பிரதிபலிக்கின்ற இலங்கை தேசியக் கொடியை ஏற்றுவதில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னால் இதே பாடசாலைக்கு விஜயம் செய்த வடக்கு மாகாண முன்னாள் கல்வியமைச்சரும் தேசியக் கொடியினை ஏற்றவில்லை. எனவே கடந்த 65ஆண்டு காலமாக தேசியக் கொடி மாற்றப்படவேண்டும் என்பதற்காக தமிழ் மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் இதனைப் பின்பற்றி வருகின்றனர். இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேசியக்கொடி மாற்றப்படவேண்டும் என்கின்ற கோரிக்கையும் முக்கியமான விடயமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய புதிய அரசியல் யாப்பில் இணைத்துக்கொள்வதற்காக வடக்கு மாகாண சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசிற்குக் கையளிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்திலும் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மூவின மக்களும் விரும்பி மதித்து ஏற்றுக்கொள்ளத்தக்க கொடியொன்றினை உருவாக்க வேண்டிய அவசியம் பற்றி கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு மாறாக, எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒரு கொடியினை நான் மட்டுமே ஏற்கவில்லை என்பதாக போலிப் பிரச்சாரம் செய்யப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது.

இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டபோது அங்கு பிரசன்னமாகியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இது எமது கொள்கையின்பாற்பட்ட விடயம் என்பதையோ தமிழ் மக்களின் உணர்வை இவ்வகையில் நாம் அனைவரும் பிரதிபலித்து வருகின்றோம் அதற்கு தீர்வு காணவேண்டும் என்றோ குரலெழுப்பவில்லை. மாறாக, அனைவரும் மௌனம் சாதித்ததுடன் பாராளுமன்றத்திற்கு வெளியே என்னை ஒரு போலி தேசியவாதி என விமர்சனம் செய்யவும் தயங்கவில்லை. என்னை விமர்சிப்பதாக நினைத்து தமிழரசுக் கட்சியினர் தங்கள் கொள்கையையே மாற்றிக்கொண்டதை நினைக்கையில் எம்மால் அவர்கள்மீது இரக்கப்பட மட்டுமே முடியும்.

மக்களே எமது எஜமானர்கள். ஆகவே இதனையும் மக்களிடமே விட்டுவிடுகிறோம்.

கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்

-tamilcnn.lk

TAGS: