“புதிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டியது, தமிழர்களுக்கு மட்டும் கட்டாயமானது அல்ல. இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், பெரும்பான்மை இன மக்களுக்கும் அவசியமான ஒன்றாகமாறி வருகிறது. இந்தச் சாதகமான சூழ்நிலை மீண்டும் ஒருமுறை ஏற்படுமென எண்ண முடியாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்தார்.
திருகோணமலையில் நேற்று (24) மாலை இடம்பெற்ற இடைக்கால அறிக்கை தொடர்பான விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது,
“நாட்டில் பெரும் அரசியல் கட்சிகள் இரண்டு இணைந்து ஆட்சி அமைத்துள்ளது என்பது எமது தலைவர்கள் அன்று கூறிய தீர்க்க தரிசனம் இன்று ஒவ்வொன்றாக நடக்கின்றது.
“உருவாகி வரும் புதிய அரசியல் சாசனத்தில் அதிகாரங்கள் பகிரப்படும் விதத்தில் அமைந்துள்ளது. இதனை பெரும்பான்மை இன மக்களிடமும் தெளிவு படுத்தி அனைவரும் புரிந்துகொண்ட ஒரு தீர்வே இனப்பிரச்சினைக்கான சரியான தீர்வாக அமைய முடியும்.
“நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கி, சாத்வீகமான ரீதியில் தற்போது தமிழர் உரிமைகளுக்காக போராடி வரும் எமக்கு சர்வதேசத்தின் மத்தியில் நல் அபிப்பிராயம் உள்ளது.
“தற்போதய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவாகிய போதே, மக்களின் ஆணையையும் இந்த வெற்றியையும் மாற்ற மஹிந்த ராஜபக்ஷ முயற்சி செய்த போது சர்வதேசத்தின் அழுத்த்தாலேயே அது முறியடிக்கப்பட்டது. இது போல ஆட்சி மாற்றத்துக்கும் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் தலையீடு இருந்துள்ளது.
எனவே, இன்றைய கூழலில் தமிழர்களுக்கான தீர்வை வழங்காது தற்போதய அரசாங்கம் எம்மை ஏமாற்றி விட முடியாது” எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண சபை முன்னால் விவசாய அமைச்சரும் தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண முன்னால் கல்வியமைச்சர் சி.தண்டாயுபாணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
-tamilmirror.lk