‘கடந்த ஆட்சிக் காலத்தில் சுதந்திரம் இருக்கவில்லை’

“கடந்த ஆட்சிக் காலத்தில், அரச அலுவலர்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலக கருத்தரங்கு மண்டபத்தில் இன்று (28) இடம்பெற்ற பாராட்டுவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,

“முன்னைய ராஜபக்ஷ அரசாங்கம் இருக்கும் போது, அரச அலுவலர்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை. தாம் அடையாளங் காட்டுவனவற்றையே அலுவலர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றிருந்தது. அதுவும் இராணுவப் பின்னணி கொண்ட ஆளுநர் ஆணையிட்டே தனது அலுவல்களை ஆற்றிக் கொண்டார். தனக்குச் சாதகமாக நடப்பவர்களைத் தட்டிக் கொடுத்தார். மற்றவர்களைத் தண்ணீர் இல்லாக் காட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தார். இதைப்பார்த்த அலுவலர்களும், அதிகாரிகளுக்கு அடிபணிந்து சேவையாற்றத் தலைப்பட்டனர்.

“இந்த நடைமுறை பிழையென்று அரசியலுக்கும் நிர்வாகத்துக்கும் வந்தவுடனேயே நாங்கள் அடையாளங்காண நேரிட்டது. சில விடயங்களை நாம் அவதானித்தோம். அதாவது நிர்வாகச் சேவை என்று ஒரு சேவையை உருவாக்கி, அதற்கான பயிற்சி அளித்து, அவர்களுக்கான நடைமுறைகளைச் சட்ட திட்டங்களை வகுத்து, அலுவலர்கள் அவற்றில் இருந்து நழுவ நேரிட்டால், உத்தியோக பூர்வமாக மாற்று நடவடிக்கைகள் எவ்வாறு எடுப்பது என்பது போன்ற பல வரையறைகளை அரசாங்கம் வகுத்திருந்தது.   “பக்கச் சார்பில்லாமல் தமது கடமைகளைச் சட்டப்படி சிரத்தையுடன் செய்வதையே நிர்வாகச் சட்டமும் கணக்கியல் சட்டமும் எம் அலுவலர்களிடம் எதிர்பார்த்தன. அதைச் செய்யவிடாது, அரசியல்வாதிகள் தமக்குப் பக்கச்சார்பாக அலுவலர்கள் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையென்றே எமக்குப்பட்டது. ஆகவே, அலுவலர்கள் சட்டப்படி சிரத்தையுடன் பக்கச் சார்பின்றிக் கடமையாற்ற நாம் வழிசமைத்துக் கொடுத்தோம்.

“வடமாகாணத்தின் அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில், 2015ஆம் ஆண்டில் நிதி நடவடிக்கைகளின் அதியுயர் செயலாற்றுகைகளை திறமையாக மேற்கொண்ட அவ்வத் திணைக்களங்களின் அமைச்சுகளின் தலைவர்கள், கணக்காளர்கள் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் பாராட்டிக் கௌரவிப்படுவர். இவர்களின் முன்மாதிரியில், இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற சிறந்த நிதி முகாமைத்துவத்தைப் பேணி மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதற்கும் அனைத்து அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கடுமையாகவும் நேர்மையாகவும் உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

-tamilmirror.lk

TAGS: