தமிழர்களின் வாழ்வோடும், பண்பாட்டோடும் ஒன்றித்துப் போன நாட்களில் தனக்கேயுரிய சிறப்பம்சங்களைக் கொண்டதாக மாவீரர் நாள் திகழ்கிறது.
27.11.1989 அன்று மாவீரர் நாளைப் பிரகடனம் செய்து வைத்த பொழுது தனது அறிக்கையில் தமிழீழத் தேசியத் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘ஓர் இனத்தைப் பொறுத்தவரை வீரர்களையும், அறிவாளிகளையும், பெண்களையும் மதிக்காத இனம் ஓர் காட்டுமிராண்டி இனமாகத்தான் மாறி அழிந்து விடும். எங்களுடைய இனத்தில் அறிவாளிகள் இருக்கிறார்கள். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது எங்கள் இனத்தில் பெண்கள் புனிதமாக மதிக்கப்படுகிறார்கள். அதேவேளை வீரர்களுக்குத்தான் பஞ்சமாக இருந்தது. ஆனால் இன்று இந்த மாவீரர் நாளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டோம். ஆம், எமது வீரர்களைக் கூட நாம் கௌரவிக்க ஆரம்பித்துள்ளோம்.
இதுவரை காலமும் எங்களுடைய இனத்தில் வீரர்கள் என்றால் யார் என்று கேட்கும் நிலை இருந்தது. ஆனால் இன்று நாம் எம் இனத்தின் வீரர்களை நினைவுகூரும் நாள் ஒன்றை உருவாக்கியுள்ளோம். எனவே இனி எமது இனம் நிச்சயமாக அழியாது. இன்று எமது இனம் உலகிலேயே தலை நிமிர்ந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் எமது 1307 போராளிகளின் உயிர்த் தியாகம் தான். அவர்களுடைய வீரமான, தமது உயிரையே மதியாது போராடிய உண்மையான தியாகம் தான் எங்களுக்கு இன்று உலக நாடுகளில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த மாவீரர் நாளை நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் முக்கியமான விழாவாக இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் கொண்டாட ஆரம்பிக்க வேண்டும்.’
மாவீரர் நாள் பிரகடனம் செய்யப்பட்டு கடந்த 27.11.2017 திங்கட்கிழமையுடன் இருபத்தெட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மாவீரர்களை மதிப்பளிக்கும் நிகழ்வாக மட்டுமன்றி, தமிழீழ தாயகத்திலும், ஈழத்தீவின் ஏனைய பகுதிகளிலும், தாய்த் தமிழகத்திலும், உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் அனைத்துத் தமிழர்களையும் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் நிகழ்வாக மாவீரர் நாள் திகழ்கிறது.
எதிரியின் திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் காரணமாக 2009 வைகாசி 18இற்குப் பின்னர் பல அணிகளாகப் புலம்பெயர்வாழ் தமிழர்களும், தாயகத் தமிழர்களும் பிரிந்து நின்றாலும், மாவீரர் நாள் என்று வரும் பொழுது, மாவீரர்களை நினைவுகூர்வது என்று வரும் பொழுது, எவருமே அதனை ஆட்சேபிப்பது கிடையாது. விரல்விட்டு எண்ணக்கூடிய புல்லுருவிகளைத் தவிர எவருமே மாவீரர் நாளில் மாவீரர்களை இழிவுபடுத்தும் வகையிலான செய்கைகளில் ஈடுபடுவதும் கிடையாது.
இது மாவீரர் நாளின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
இன்றும் சரி, அன்றும் சரி, காலம் காலமாக மத நிகழ்வுகள் மட்டுமே தமிழர்களை ஒரே கோட்டில் இணைக்கும் நிகழ்வுகளாகத் திகழ்ந்தன.
ஆனால் மதங்களைக் கடந்து, எமது சமூகத்தில் இன்றும் புரையோடிக் கிடக்கும் ஏனைய பேதங்களைக் கடந்து, மானமுள்ள ஒவ்வொரு தமிழர்களையும் இணைக்கும் நாளாக மாவீரர் நாள் மாறியிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி வாரங்கள் நெருங்க, நெருங்க கொழும்பிலும், டில்லியிலும் ஆனந்த நர்த்தனங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன. திட்டமிட்டபடி தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டால், இனவழிப்பிற்கு எதிரான ஆயுத எதிர்ப்பியக்கமாக மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்தீவில் சூறைக்காற்றாக வீசிக் கொண்டிருந்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்கி விட்டால், புலிகளுக்குப் பின்னரான அரசியல் ஒன்றை உருவாக்கி விடலாம் என்று கொழும்பிலும், டில்லியிலும் கோலோச்சிக் கொண்டிருந்தவர்கள் கனவு கண்டார்கள்.
அதுகாறும் தென்னிலங்கையிலும், இந்தியாவிலும் தலைமறைவாகவும், மேற்குலக நாடுகளில் ஆங்காங்கே சிதறுண்டும் கிடந்த புல்லுருவிகளுக்கு ஊட்டச் சத்து அளிக்கப்பட்டு, தூசிபடிந்து கிடந்த அவர்களின் மட்டி அரசியல் சித்தாந்தகளுக்கு கடுகதியில் உயிரூட்டம் அளிக்கப்பட்டது.
மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிந்து விட்டால் இனித் தானே தமிழர்களின் தானைத் தலைவன் ஆகிவிடுவேன் என்ற கற்பனையில் மிதந்த இராஜவரோதயம் சம்பந்தர், முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகளின் முற்றுகை இறுக, இறுக மேசையில் குத்தி மகிழ்ந்தார்.
அந்தோ பாவம். இவர்கள் எவரதும் கனவுகள் பலிக்கவேயில்லை.
ஏறத்தாள இருபது ஆண்டுகளாக இயங்கிய தமிழீழ நடைமுறை அரசு முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டது உண்மைதான். நான்காம் கட்ட ஈழப்போரில் சிங்களப் படைகள் வெற்றியீட்டியதும் உண்மைதான். மக்களோடு மக்களாக நிராயுதபாணிகளாகத் தப்பிச் செல்ல முற்பட்ட பொழுது சிறைப்பிடிக்கப்பட்டவர்களும், சரணடைந்தவர்களுமாகப் போராளிகள், காவல்துறை வீரர்கள், துணைப்படை வீரர்கள், பணியாளர்கள், ஆதரவாளர்கள் என்று ஏதோ ஒரு விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்புலத்தைக் கொண்டிருந்த பதினோராயிரம் பேரை வதைமுகாம்களில் சிங்கள அரசு அடைத்து வைத்ததும், அவர்களைக் கொடும் வதைகளுக்கு உட்படுத்திய பின்னர் புனர்வாழ்வில் பெயரில் விடுதலை செய்ததும் உண்மைதான். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பக்கபலமாக நின்றதற்கான கூட்டுத் தண்டனையாக இரண்டு இலட்சத்து எண்பதுனாயிரம் தமிழ்ப் பொதுமக்களை திறந்தவெளி வதைமுகாம்களில் அடைத்து வைத்து சிங்கள அரசு பாதகச் செயல்புரிந்ததும் உண்மைதான்.
ஆனாலும் இவையெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான அரசியலை உருவகிக்கவில்லை. கொழும்பைப் பொறுத்தவரையும் சரி, டில்லியைப் பொறுத்தவரையும் சரி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான அரசியல் என்பது இன்றும் கானல்நீராகவே காணப்படுகின்றது.
சிங்கள நாடாளுமன்றத்தில் வைத்துத் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று அழைத்த சம்பந்தராக இருந்தாலும் சரி, அவருக்குப் பரிவட்டம் கட்டுவோராக இருந்தாலும் சரி, தமிழீழ தேசியத் தலைவரையும், அவரது வழிநின்று களமாடி வீழ்ந்த மாவீரர்களையும் புறமொதுக்கி அரசியல் செய்ய முடியாத நிலையிலேயே இருக்கின்றார்கள்.
இதேநிலை தான் தாய்த் தமிழகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும். தமிழீழ தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் முன்னிறுத்தி எவரும் அரசியல் செய்கின்றார்களோ இல்லையோ, தலைவரையும் மாவீரர்களையும் புறந்தள்ளி எவராலும் அரசியல் செய்ய முடியாது என்பதே யதார்த்தமாகும்.
இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இயங்கு நிலையில் இல்லை தான். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரையும், கடிதத் தலைப்புக்களையும் பயன்படுத்தி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகக் காகிதப் புலிகளால் அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன தான். எல்லோருக்குமே தெரியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்திப் பல்வேறு அணிகளின் பெயர்களில் வெளிவரும் அறிக்கைகள் எல்லாம் காகித ஏவுகணைகள் தான் என்று. இந்தியாவிலோ, அல்லது மேலைத்தேய நாடொன்றிலோ ஒய்யாரமாகக் கொய்யகம் புரிந்தவாறு, அவரர் விரும்பியபடி தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை விடுக்கிறார்கள். இதுவும் ஓர் உண்மையை உணர்த்துகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசன்னம் இல்லாத காலத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்தான் தொடர்கின்றது என்பதுதான் அது.
இன்று மட்டுமல்ல.
எத்தனை தசாப்தங்கள் கடந்தாலும் இதே நிலைதான் தொடரப் போகிறது.
இதனையே தமிழீழ தாயகத்தின் மாவீரர் துயிலும் இல்லங்களிலும், புலம்பெயர் தேசங்களிலும், தாய்த் தமிழகத்திலும் உணர்வெழுச்சியுடன் இவ்வாண்டு நிகழ்ந்தேறிய மாவீரர் நாள் நிகழ்வுகள் எடுத்தியம்புகின்றன.
மாவீரர்களின் நினைவுகளை மட்டும் சுமந்து நெய் விளக்குகளையும், மெழுகுதிரிகளையும் நாம் ஏற்றவில்லை. ‘தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும், தனியரசு என்றிடுவோம். எந்த நிலை வரும் பொழுதிலும் நிமிருவோம், உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்’ என்று சபதமெடுத்தே இவ்வாண்டும் மாவீரர் நாளை உலகெங்கும் வாழும் மானத் தமிழர்கள் அனைவரும் நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். தமிழர்களின் இச் இச்சபதம் என்றோ ஒரு நாள் நிறைவேறியே தீரும் என்பது திண்ணம்.
-puthinamnews.com