சமஷ்டியை வழங்காவிட்டால் தனிநாடு கோர வேண்டியேற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்

“தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக சமஷ்டி அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். இல்லாது போனால்,

தனிநாடு கோர வேண்டிய சூழல் மீண்டும் ஏற்படும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் பைரஸ் ஹட்சன் வடக்கு மாகாண முதலமைச்சரை நேற்றுமுன்தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அவுஸ்திரேலியா போன்று சமஷ்டி அதிகாரப் பகிர்வையே தமிழ் மக்கள் கோருகின்றனர். அதனை வழங்கினால் தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்து சென்றுவிடுவார்களோ என்ற ஐயப்பாடு தென்னிலங்கை ஆட்சியாளர்களிடம் உண்டு. சமஷ்டித் தீர்வை வழங்காவிடின்தான் தனிநாட்டைக் கோரும் அவசியம் தமிழர்களுக்கு ஏற்படும்.

அவுஸ்திரேலியாவில் சமஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. அங்கு ஒவ்வொரு மாகாணங்களும் தங்களைத் தாங்கள் ஆளுகின்ற வசதி வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தான் தமிழ் மக்கள் இங்கு கோருகின்றனர். அதற்கு ஒவ்வொரு தென்னிலங்கை அரசும் முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளன.

சமஷ்டியை வழங்க மறுப்பதற்கு அவர்களின் அச்சநிலையும் காரணமாக அமைகின்றது. சமஷ்டி அதிகாரப் பகிர்வைப் பெற்றுக்கொண்டு தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்து சென்றுவிடுவார்களோ என்ற அச்சம் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு உண்டு.

ஆனால், சமஷ்டி அதிகாரப் பகிர்வை வழங்காதுவிடின்தான் தமிழ் மக்கள் தனிநாட்டுக் கோரிக்கைக்குச் செல்வர். தமிழ் மக்களின் சுயாட்சிக்கு இடையூறு விளைவிக்காதுவிடின் தனிநாட்டுக் கோரிக்கைக்கான அவசியம் அவர்களுக்கு ஏற்படாது.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: