வடக்கில் இன்னமும் இராணுவத்தின் வல்லாட்சியே நீடிக்கின்றது: சிவஞானம் சிறிதரன்

“வடக்கில் இராணுவத்தின் வல்லாதிக்க ஆட்சியே இன்னமும் தொடர்கின்றது. இராணுவத்தின் சிறையில் இருக்கும் வடக்கில் சிவில் நிர்வாகத்தைக் கொண்டு வாருங்கள்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி, தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரச கருமமொழிகள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, இந்துமத விவகார அமைச்சுகளின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிவஞானம் சிறிதரன் மேலும் தெரிவிக்கையில், “வடக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியே நடக்கின்றன. அங்கு படையினர் சலூன்களை நடத்துகின்றனர். சாப்பாட்டுக் கடைகளை நடத்துகின்றனர். விவசாயம் செய்கின்றனர். வடக்கு மக்கள் தொடர்ந்தும் இராணுவத்தினருக்கு அடிமைப்பட்டவர்களாகவே வாழ்கின்றனர். இதற்கு எப்போது முடிவுகட்டப்படும்?

பயிர்ச்செய்கை நிலங்கள் இராணுவத்திடம் உள்ளன. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் வடக்கிலுள்ள நிலைமையை நேரில் சென்று பார்க்க வேண்டும். இராணுவத்தினர் பல ஏக்கர் கணக்கில் நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆகையால் தொடர்ந்தும் இராணுவத்தினரின் பிடிக்குள் அப்பகுதி மக்கள் அகப்பட்டுள்ளனர்.

சலூன், சப்பாட்டுக் கடை நடத்துவது போன்று இராணுவத்தினர் அனுமதியில்லாமல் கட்டடம் கட்டுகின்றனர். அங்கு இராணுவ ஆட்சியே நடக்கின்றது. இராணுவத்தில் இருந்து வடக்கு விடுதலையாகவில்லை. முன்னாள் போராளிகளை விடுவித்ததன் ஊடாக வடக்கின் நிலைமைகளை மாற்ற முடியாது. அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். வடக்கில் விடுதலைப் புலிகள் வீதிகளை ஒழுங்காக வைத்திருந்தனர். தற்போது வடக்கின் வீதிக் கட்டமைப்பு மோசமடைந்துள்ளது.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: