சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது

கொழும்பு, இலங்கையில் இந்தியப் பெருங்கடலை நோக்கி அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ளது.

சீனா- ஐரோப்பா இடையே பல்வேறு துறைமுகங்களையும், சாலைகளையும் இணைத்து செயல்படுத்த உள்ள பெல்ட் மற்றும் சாலை திட்டத்தில் இந்த துறைமுகம் முக்கிய பங்காற்றும் என்று சீனா நம்புகிறது.

இதற்காக இந்த துறைமுகத்தை சீனா, இலங்கையிடம் இருந்து 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கிறது. இதற்காக அந்த நாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.7,150 கோடி) மதிப்பிலானது ஆகும்.

முதல் கட்ட தவணையாக இலங்கையிடம் சீனா 300 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,950 கோடி) வழங்கியது.

இதையடுத்து அந்த துறைமுகத்தை முறைப்படி சீனாவிடம் இலங்கை நேற்று ஒப்படைத்தது.

இதையொட்டி பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பேசுகையில், “இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதின் மூலம், சீனாவிடம் நாம் பெற்ற கடனை திருப்பி செலுத்த தொடங்கி உள்ளோம். அந்தப் பகுதியில் ஒரு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும். அங்கு தொழில் நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும். இது பொருளாதார வளர்ச்சிக்கும், சுற்றுலா துறை அபிவிருத்திக்கும் உதவும்” என்று குறிப்பிட்டார்.

ஆனால் இந்த திட்டத்துக்காக இலங்கை பெரும் வரிச்சலுகை வழங்கி இருப்பது, எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கடுமையான விமர்சனத்துக்கு வழி வகுத்துள்ளது.

இந்த துறைமுக பேரம், நாட்டின் சொத்துகளை சீனாவுக்கு விற்கும் பேரம் என்று அவை சாடி உள்ளன.

-dailythanthi.com

TAGS: