சிங்கள மொழி தோன்ற முன்னர் சிங்கள மன்னன் எப்படி உருவானான்?- சரத் வீரசேகரவுக்கு விக்கி பதிலடி

அண்மையில் றியர் அட்மிரல் சரத் வீரசேகரவால் ‘சிலோன் ருடே’ ஊடகத்திற்கு ‘விக்னேஸ்வரன் பதவி விலகவேண்டும்’ என்கின்ற தலைப்பில் வழங்கப்பட்ட நேர்காணல் தொடர்பாக பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் 23 நவம்பர் 2017 அன்று திகதியிடப்பட்ட ‘சிலோன் ருடே’ ஊடகத்தில் வெளியாகிய அட்மிரல் வீரசேகரவுடனான நேர்காணலில் அவரால் வழங்கப்பட்ட பதில்கள் தொடர்பான தனது கருத்துக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் மின்னஞ்சலின் ஊடாக வழங்கியுள்ளார்.

முதலமைச்சர்: வடக்கு கிழக்கு அல்லது நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களிலும் வாழும் மக்கள் தமது தனிப்பட்ட கலாசாரம், மரபு மற்றும் அவாக்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தம்மைத் தாமே ஆளும் கூட்டாட்சி நிர்வாக அலகின் மூலம் இந்த நாட்டின் ஒன்றிணைப்பைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

சிறிலங்கா சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் சிங்கள மக்கள் பெற்றுக் கொள்ளும் நன்மைகளைத் தொடர்ந்தும் அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே றியர் அட்மிரல் வீரசேகர ஒற்றையாட்சி நிர்வாக அலகை விரும்புவது போல் தோன்றுகின்றது. சிறிலங்கா சுதந்திரமடைந்த போது இங்கு வாழும் சிறுபான்மை சமூகங்களின் நலன்களையும் பேணுவதாக அரசியல் சாசனத்தின் 29வது பிரிவை அனுமதித்ததன் மூலம் சிங்களவர்கள் வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் அடுத்த ஆண்டே அதாவது 1949ல், மலையக தமிழ் மக்களின் வாக்குரிமைகளை சிங்களத் தலைவர்கள் பறித்தனர். இதேபோன்று சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பறிக்கும் முகமாக ‘சிங்களம்’ மட்டும் சட்டம் மற்றும் கல்வித் தரப்படுத்தல் சட்டம் போன்றனவும் நடைமுறைப்படுத்தப்பட்டன. பாரம்பரிய தமிழ் பிரதேசங்கள் கொலனித்துவத்திற்கு உட்படுத்தப்பட்டன. இவை சிறுபான்மை மக்களைப் பெரிதும் பாதித்தன.

சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி நாடு எனவும்ஒற்றையாட்சியைத் 

தக்க வைத்துக் கொள்வதற்காக பலஆயிரக்கணக்கான 

ஆண்டுகளாக சிங்களவர்கள்பல்வேறு அளப்பரிய 

தியாகங்களைப்புரிந்துள்ளதாகவும் சரத் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர்: இது பொய். இவர் வரலாற்றை எங்கே கற்றுக்கொண்டார்?  1833 வரை இந்த நாடு பிரிக்கப்பட்டிருந்தது. தமிழ் பேசும் மக்கள் தமக்கென தனியான ஒரு இராச்சியத்தையும் கிழக்கு மாகாணமானது  குறுநில தமிழ்த் தலைவர்களாலும் ஆளப்பட்டன. வடக்கும் கிழக்கும் இணைந்து தமிழ் பேசும் பிரதேசமாக நிர்வகிக்கப்பட்டன. இத்தீவில் மூன்று அல்லது நான்கு தனித்தனியான இராச்சியங்கள் காணப்பட்டன. 44 ஆண்டுள் ஆட்சி செய்த எல்லாளன் என்கின்ற தமிழ் மன்னன் இத்தீவு முழுவதையும் ஒன்றிணைத்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வரை ஒருபோதும் இங்கு ஒற்றையாட்சி நிர்வாகம் காணப்படவில்லை.

இந்த நாட்டில் கூட்டாட்சி நிர்வாக அலகு ஏற்றுக்கொள்ளப்பட்டால் 

நாடு பிளவுபட்டுவிடும் என றியர்அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்

முதலமைச்சர்: தற்போது கூட இந்த நாடு பிளவுபட்டே காணப்படுகிறது. இது சிங்கள பௌத்த தேசம் அல்ல. இங்கு கிறிஸ்தவ மற்றும் இந்து மதங்களைப் பின்பற்றும் சிறிலங்காத் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவ, பௌத்த மதங்களைப் பின்பற்றும் சிங்களவர்கள், வேடுவர்கள் ஆகிய சகல இன மதத்தினருக்கும் இந்த நாடு சொந்தமானதாகும்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பின் மூலம் செயற்கையான ஒற்றுமை ஒன்று இங்கு காணப்படுகிறது. ஒற்றையாட்சி அரசியலமைப்பின் முழுமையான அதிகாரத்தையும் சிங்களவர்கள் கொண்டுள்ளதால் இந்த நாட்டை அவர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றனர். இதுவே இங்கு பிரச்சினை ஏற்படுவதற்கான காரணமாகும்.

பிரித்தானிய ஆட்சியாளர்கள் சிங்களவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை சிங்களவர்கள் தவறாகப் பயன்படுத்துவதுடன் சிங்களவர்கள் ஆரம்பத்திலிருந்து தமிழ்; மக்களின் உரிமைகளைப் புறக்கணித்து வருகின்றனர்.

சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு சமஅந்தஸ்து வழங்கப்படுவதாக சேர் ஜோன் கொத்தலாவ தெரிவித்த போது, ‘சிங்கள மட்டும் சட்டம் 24 மணித்தியாலங்களில் நடைமுறைப்படுத்தப்படும்’ என எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அறிவித்தார். இதன்மூலம் இவர் பெரும்பான்மை சமூகத்தின் மட்டமான உள்ளுணர்வுகளை  வென்றெடுத்ததன் மூலம்   1956ல் இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். அதாவது நான் இங்கே மட்டமான உள்ளுணர்வுகள் என ஏன் குறிப்பிட்டுள்ளேன் என்றால், 1958ல் சிங்களவர்களால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதன் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் மக்கள் மீது பெரும்பான்மை சமூகத்தினர் படுகொலைகளை நிகழ்த்தினர்.

இவ்வாறான படுகொலைகள் மற்றும் கிளர்ச்சிகள் போன்றன சிங்கள அதிகாரத்துவத்தாலும் ஏனைய சமூகங்களை சிங்கள சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாமையுமே காரணமாகும். தமிழ் பேசும் மக்கள் உட்பட அனைத்து சமூகங்கள் மத்தியில் சமத்துவத்தையும் கௌரவத்தையும் கூட்டாட்சி நிர்வாக அலகின் மூலம் நடைமுறைப்படுத்த முடியும். மக்கள் தொகையில் அதிகமுள்ள சமூகம் ஒன்று ஒருபோதும் மற்றைய சமூகங்களின் உறுப்பினர்களை விடப் பெரிதாகவோ அல்லது சிறந்ததாகவோ இருக்க வேண்டும் எனக் கருதமுடியாது.

அனைத்து மக்களும் சமஉரிமையைக் கொண்டுள்ளனர். தமிழ் பேசும் மக்களின் தனித்துவம் பேணப்பட வேண்டும். தற்போது இந்த நாடானது பௌத்த சிங்கள நாடு என அழைக்கப்படும் நிலை காணப்படுவதுடன் தமிழ் மக்கள் தொடர்பாக தவறான தகவல்கள் கொடுக்கப்படுகின்றன. தமிழர் பாரம்பரிய வாழிடங்களில் சிங்களவர்களைக் குடியேற்றும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

ஒன்றுபட்ட சிறிலங்காவின் நலனுக்காக இங்கு வாழும் ஏனைய சமூகங்களுடன் பணியாற்றும் போது எமது தனித்தன்மையையும் கௌரவத்தையும் பேணுவதற்கான ஒரு சிறந்த ஏற்பாடாக கூட்டாட்சி காணப்படுகிறது. இதன் காரணமாகவே ஒற்றையாட்சிக்குப் பதிலாக நாங்கள் கூட்டாட்சி நிர்வாக அலகை கோரியிருந்தோம்.

சரத் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தார். 

அதாவது கூட்டாட்சியைஅமுல்படுத்தினால் சிங்களவர்களும் முஸ்லீம்களும் 

யாழ்ப்பாணத்தில் வாழமுடியாது எனவும்இதனாலேயே நான் தமிழ் இளைஞர்களிடம் 

சிங்களவர்களைத் திருமணம் செய்ய வேண்டாம் எனஅறிவுரை கூறியிருந்ததாகவும்

 சரத் தனது செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சர்: நான் எனது பின்னணியை நினைத்துப் பெருமைப்படுகிறேன். நான் இந்த நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்துள்ளேன். இந்த நாட்டில் வாழும் அனைத்து மதங்கள் தொடர்பான அறிவை நான் கொண்டுள்ளேன். பௌத்தம் தொடர்பாக வணக்கத்திற்குரிய நாரதா தேரர் கருத்துரைகளை வழங்கும் போதெல்லாம் நான் வஜிரமயாவிற்கு சென்றிருந்தேன். இந்த நாட்டில் பேசப்படும் மூன்று பிரதான மொழிகளையும் ஓரளவிற்கு அறிந்து வைத்துள்ளேன். நான் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள், பறங்கியர்கள், மலாயர்கள் மற்றும் ஏனைய இனத்துவர்களுடன் நெருங்கிப் பழகியுள்ளேன்.

நான் ஒரு இலங்கைத் தமிழன் என்றே கருதுவேனே தவிர சிறிலங்கன் எனக் கருதுவதில்லை. ஆனால் சிங்களவர்களும் முஸ்லீம்களும் யாழ்ப்பாணத்தில் வசிப்பதற்கான உரிமையைக் கொண்டிருக்கவில்லை என நான் ஒருபோதும் கூறவில்லை. இது தவறானது. அரசின் ஆதரவுடன் தற்போதும் மேற்கொள்ளப்படும் கொலனித்துவத்தை நான் எதிர்க்கின்றேன். தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் இடங்களில் திட்டமிட்ட ரீதியில் சிங்களக் குடியேற்றங்களை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருவதை நான் எதிர்க்கின்றேன்.

என்னுடைய சொந்தப் பிள்ளைகளே சிங்களவர்களைத் திருமணம் செய்துள்ள போது நான் எவ்வாறு தமிழ் இளைஞர்களிடம் சிங்களவர்களைத் திருமணம் செய்யக்கூடாது எனத் தெரிவித்திருக்க முடியும்?

சிறிலங்காவின் உண்மையான வரலாற்றை நான் அறிந்திருக்க வேண்டும் எனவும்

 சிறிலங்காவரலாற்று ரீதியாக தனிநாடாகவே உள்ளதாகவும் சரத் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர்: இலங்கைத் தமிழ் மக்களின் வரலாறை இங்கு கூறவேண்டும். தமிழ் திராவிடர்கள் இந்த நாட்டின் மூலக் குடிமக்களாவர். தமிழர்கள் வரலாற்றின் சில கட்டங்களின் பின்னரே இந்த நாட்டிற்கு வந்தனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவர்கள் அனைவரும் இந்த நாட்டின் மூலக் குடிமக்களான திராவிடத் தமிழர்களாகவே கருதப்படுகின்றனர். ஒரு பாடசாலையில் பல்வேறு வகுப்புக்களில் மாணவர்கள் இணைகின்றனர். ஆனால் இவர்கள் அனைவரும் அதே பாடசாலையின் பழைய மாணவர்களாகவே கருதப்படுகின்றனர்.

இதேபோன்றே வடக்கு கிழக்கில் உள்ள அனைத்துக் குடிமக்களும் திராவிடத் தமிழர்களாவர். 44 ஆண்டுகளாக ஆட்சி செய்த தமிழ் மன்னனான எல்லாளன் காலத்திலேயே இலங்கை ஒரு தலைமையின் கீழ் ஆளப்பட்டது. அதற்கு முன்னர் இந்த நாடானது பல்வேறு சுயாதீன மாநிலங்களைக் கொண்டிருந்தது.

ஒரு மன்னன் இந்த நாட்டிலிருந்த அனைத்து இராச்சியங்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அவற்றை ஒன்றாக இணைத்திருக்காவிட்டால் ஒருபோதும் ஒன்றுபட்ட சிறிலங்கா உருவாகியிருக்காது.

பிரித்தானியாவின் கொலனித்துவத்தின் கீழ் சிறிலங்கா உட்பட்டிருந்த காலப்பகுதியில் அதாவது 1833ல் பல்வேறு நிர்வாக அலகுகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒற்றையாட்சி கொண்டு வரப்பட்டது. இன்றுவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பெரும்பான்மை தமிழ் பேசும் மாகாணங்களாக உள்ளதால் கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் தமிழ் பேசும் மக்களின் குடியியலில் மாற்றம் கொண்டு வருவதற்கான திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டன. தற்போதும் இந்த நடவடிக்கைகள் இராணுவப் படைகளின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன.

1970களில் சிறிமாவோவின் ஆட்சி இடம்பெற்ற போது திருகோணமலையைச் சூழவும் சிங்கள கொலனித்துவங்கள் இடம்பெற்றன. இவ்வாறு குடியேற்றப்பட்டவர்களை நான் 1970களில் சந்தித்தேன். அரசாங்கமே தங்களை தமிழ் மக்களின் பிரதேசங்களில் குடியேற்றுவதில் விருப்பம் கொண்டிருந்ததாகவும் ஆனால் தமக்கான போதியளவு பாதுகாப்போ அல்லது வசதிகளோ ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் என்னிடம் முறையிட்டனர்.

நான் ஒரு சிங்களவன் என நம்பியே அவர்கள் என்னிடம் இதனைத் தெரிவித்தனர். தமிழ் மக்களின் பாரம்பரிய வாழிடங்களில் கையகப்படுத்தி அங்கே சிங்களவர்களைக் குடியேற்றும் ஒரு திறந்த கொலனித்துவமாக இது காணப்பட்டது.

சிங்களவர்கள் மத்தியில் தெற்கில் வாழும் 58 சதவீத தமிழ் மக்கள் தொடர்பாக 

றியர் அட்மிரல் சரத்சுட்டிக்காட்டியிருந்தார்.

முதலமைச்சர்: அவர்கள் ஒரு நாட்டின் கீழ் வாழ்கின்றனர். ஆகவே தாம் வடக்கிலா அல்லது தெற்கிலா   வாழவேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்க முடியும். கொழும்பிலுள்ள தமிழர்களோ அல்லது வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள சிங்களவர்களோ பலவந்தமாக வெளியேற்றப்பட முடியாது. இது கூட்டாட்சி தொடர்பான பிழையான கருத்தாகும். சிங்கள மக்கள் மத்தியில் கூட்டாட்சி தொடர்பாக தவறான புரிந்துணர்வு காணப்படுகிறது.

அரசியல்வாதியல்லாது ஒவ்வொரு படித்த சிங்களவனும் இந்த நாட்டில் அனைத்து சமூகங்களும் சமத்துவத்துடனும், கௌரவத்துடனும், சமாதானத்துடனும் வாழ்வதற்கு அனுமதிக்கும் பொருத்தமான அரசியலமைப்பு ஏற்பாடுகளைக் கொண்ட கூட்டாட்சி நிர்வாக அலகை வரவேற்கிறார்கள்.

அரசாங்கத்தில் வடக்கின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியைத் 

தாங்கள்திருப்பியனுப்பியதாக கௌரவ டக்ளஸ் தேவானந்தாவை மேற்கொள் காட்டி 

றியர் அட்மிரல் சரத்குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சர்: மீண்டும் அவரது கருத்து பிழையானது. இன்றுவரை வடக்கிற்காக ஒதுக்கப்பட்ட ஒரு சதத்தைக் கூட நாங்கள் திருப்பி அனுப்பவில்லை. பொருத்தமான நிதி முகாமைத்துவத்திற்காக வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சு முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. 831 அமைச்சுக்கள், மத்திய மற்றும் மாகாணத் திணைக்களங்கள், உள்ளுராட்சி சபைகள் ஆகியவற்றின் மத்தியில் வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சு இந்த வாரம் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டது.

இந்த அடிப்படையில் நாங்கள் இந்த ஆண்டு அபிவிருத்திப் பணிகளை ஆற்றியுள்ளோம். ஆனால் மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக முழுமையான நிதியையும் எம்மிடம் வழங்கவில்லை. ஒப்பந்தகாரர்கள் பணிகளை நிறுத்தியுள்ளனர். 1000 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி எமக்கு வரவேண்டியுள்ளது. இது தொடர்பாக றியர் அட்மிரல் சரத்திற்கு ஏதாவது தகவல்கள் தேவைப்படின் எம்மை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அவருக்கு நாங்கள் பதிலளிப்போம். எமது மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதியிடம் அவர் இது தொடர்பாக ஏன் கேட்கிறார்? தற்போதும் டக்ளஸ் தேவானந்தா ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் எனில் அதற்குக் காரணமான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமைக்கு நன்றிகள்.

இந்த முறைமை இல்லாவிட்டால் இவர் தற்போது முன்னாள் அமைச்சராக உள்ளது போன்று அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்திருப்பார்.

 தேவநம்பிய தீசன் ஒரு தமிழ் மன்னன் என்பதை சரத் ஏற்றுக்கொள்ளவில்லை.

முதலமைச்சர்: தேவநம்பிய தீசன், சிங்கள மொழி தோன்றுவதற்கு முன்னர் வாழ்ந்த மன்னன் ஆவார். ஆகவே அவர் எவ்வாறு ஒரு சிங்களவராக இருக்க முடியும்? சிங்கள மொழியானது கிட்டத்தட்ட கி.பி 6வது அல்லது 7வது நூற்றாண்டின் பின்னர் மட்டுமே தோற்றம் பெற்றது. சிங்கள மொழி தோன்றுவதற்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்த மன்னனை சிங்களவர் எனக் கூறுவது முட்டாள்தனமானது. சிங்கள மொழி தோன்றியதன் பின்னர் எழுதப்பட்ட நூல்களில்  எமது நிலங்கள் தொடர்பாக அவர்களுக்கு விருப்பமான கருத்துக்கள் எழுதப்பட்டிருக்கலாம்.

 இந்த நாட்டின் மூலப்பெயர் ‘சிங்கலே‘ என றியர் அட்மிரல் வீரசேகர குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சர்: மீண்டும் இது பொய்யானது. ஈழம் என்பதே மூலப் பெயராகும். ஹெல என்பது ஈழம் என்பதன் பாளி மொழிச் சொல்லாகும்.  சிங்கலே என்பது கலவைச் சொல்லாகும். இது தொடர்பாக பாரபட்சமற்ற அனைத்துலக வரலாற்று ஆய்வாளர்கள் , போலி வரலாற்றாய்வாளர்களுடன் விவாதம் செய்து உண்மையைக் கண்டறிய வேண்டும்.  இத்தகைய போலி வரலாற்று ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்ட போலி வரலாற்றுப் பதிவுகளை அழிப்பதற்கு ஒரு மணித்தியாலம் கூடத் தேவையில்லை. இத்தகைய கற்பனையான கருத்துக்களை இல்லாதொழிப்பதற்கு முன்னாள் பௌத்த திராவிடன் ஒருவனை உருவாக்க வேண்டியிருக்கும்.

 வடக்கில் சிங்களவர்களை நான் அனுமதிக்க விரும்பவில்லை என 

சரத் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர்: இதுவும் பிழையான கருத்தாகும். நான் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறும் திட்டமிட்ட அரச கொலனித்துவங்களையே எதிர்க்கின்றேன். வவுனியாவில் 75 ஆண்டுகளுக்கு மேல் வாழும் சிங்களவர்கள் உள்ளனர். நிச்சயமாக இவர்கள் வடக்கின் மக்களாவர். வவுனியாவிலிருந்து வடக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் இரண்டு சிங்கள சகோதார உறுப்பினர்களுக்காக மாகாண சபையில் வழங்கப்படும் அனைத்து ஆவணங்களையும் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் சிங்களத்தில் மொழிபெயர்த்து அவர்களிடம் வழங்குகிறோம். நாங்கள் சிங்கள சகோதரர்களை அன்புடனும் மதிப்பிடனும் நடத்துகிறோம். திரு.வீரசேகர தனது மனதில் வைத்திருக்கும் இராணுவ மனவோட்டங்களை அழித்துக் கொள்ள வேண்டும்.

போர்வீரர்களை போர்க்குற்றங்களை இழைத்தவர்களாக குற்றம்சாட்டுவதாக சரத் கூறியிருக்கிறார்.

போர்க் குற்றங்களை இழைத்தவர்கள் போர்க் கதாநாயகர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்பது எமது தலைவர்களின் இன்றைய துயரநிலையாகும். குற்றவாளிகள் வீரர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

வழிமூலம்        –  ceylon today
மொழியாக்கம் – நித்தியபாரதி

TAGS: