தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கிவருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உலகப் பயங்கரவாத இயக்கங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க துறை விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டுக்கான உலகப் பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டில் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும் விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் இடம்பெறவில்லை என்ற போதிலும் பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஆயுதக் கொள்வனவு போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதனை தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் அனைத்துலக ரீதியில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.