சிறிலங்காவில் தன்னிச்சையான தடுத்துவைப்புகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று, ஐ.நா நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது. தன்னிச்சையான தடுத்து வைப்புகள் குறித்த ஐ.நா பணிக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் சிறிலங்காவில் மேற்கொண்ட 12 நாட்கள் பயணத்தின் முடிவில் கொழும்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தன்னிச்சையான தடுத்து வைப்புகள் குறித்த ஐ.நா பணிக்குழுவின் உறுப்பினர்களான, லெஹ் ரூமி, ஜோஸ் அன்ரனியொன் குவேவரா பெர்முடாஸ், எலினா ஸ்ரெயினெர்ட் ஆகியோர் கடந்த 4ஆம் நாள் தொடக்கம் 15ஆம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
இவர்கள் கொழும்பு, நீர்கொழும்பு, அனுராதபுர, வவுனியா, திருகோணமலை, பொலன்னறுவ பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டதுடன், 30 இற்கும் மேற்பட்ட தடுப்பு நிலையங்களுக்கும் சென்று பார்வையிட்டனர். 100இற்கும் அதிகமான கைதிகளைச் சந்தித்து வாக்குமூலங்களைப் பெற்றனர்.
சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள், நீதிபதிகள், சட்டவாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்தனர்.
இந்தப் பயணத்தின் முடிவில் நேற்று கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா பணிக்குழுவின் பிரதிநிதிகள், சிறிலங்காவில் தன்னிச்சையான தடுத்து வைப்புகள் தொடர்வதாகவும், இது முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
“நாடு முழுவதும் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படும் இடம்பெறுவதானது, சிறிலங்காவில் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு சவாலாக உள்ளது.
தன்னிச்சையான தடுத்துவைப்புகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தனிப்பட்ட சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமையை, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், படையினர், நீதித்துறை, ஏனைய அதிகாரிகள் மதிப்பதில்லை.
பழைய சட்டங்களைப் பயன்படுத்தி, தன்னிச்சையாக தடுத்து வைத்தல், சித்திரவதைகளைச் செய்தல் போன்றவற்றைத் தடுப்பதற்குத் தேவையான சட்ட மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
1979ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும். நான்கு பத்தாண்டு காலத்தில் தன்னிச்சையான தடுத்து வைத்தல்களுக்கு இது முக்கியமானதொரு காரணியாக இருந்து வந்திருக்கிறது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக, அனைத்துலக மனித உரிமை சட்டங்களுக்கு அமைய, புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை.
காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் சட்டவாளர்கள் இல்லாமலேயே விசாரிக்கப்படுவது கவலையளிக்கிறது.” என்றும் ஐ.நா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழு தமது இறுதி அறிக்கையை எதிர்வரும் 2018 செப்ரெம்பரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்கவுள்ளது.
-puthinappalakai.net