மீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்தமில்லை: தர்மலிங்கம் சித்தார்த்தன்

“சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்துக்காக நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்ட முன்னாள் புளொட் உறுப்பினர், 2012ஆம் ஆண்டே கட்சியைவிட்டு விலகிய நபர்” என்று புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் புளொட் அமைப்பிலிருந்த சகல ஆயுதங்களையும் ஒப்படைக்குமாறு அறிவித்திருந்த நிலையில், மீட்கப்பட்டுள்ள ஆயுதங்கள் தொடர்பில் தமது அமைப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றில் ஆயுதங்களைப் பதுக்கிவைத்திருந்ததாக முன்னாள் புளொட் உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறித்து வினவியபோதே புளொட் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளதாவது, “20.11.2012ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலுடன் குறித்த நபர் எமது கட்சியிலிருந்து விலகி விட்டார். முன்னர் அந்த இடத்தில் எமது அலுவலகம் இயங்கிவந்தது. ஆனால், குறித்த நபர் அந்த இடத்திலிருந்து வெளியேறாது பலவந்தமாகத் தங்கியிருந்தார். இது தொடர்பில் அந்தக் கட்டடத்தின் உரிமையாளருக்கும் அறிவித்திருந்தேன்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் சகல முகாம்களிலிருந்த ஆயுதங்களை மீளக் கையளிக்குமாறு நான் அறிவித்திருந்தேன். சகல ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டதாக நம்பியிருந்த நிலையில், மீட்கப்பட்டிருக்கும் இந்த ஆயுதங்கள் குறித்து பொலிஸார் இன்னமும் எனக்கு அறிவிக்கவில்லை.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டவையா என்பது விசாரிக்கப்பட வேண்டியது. குறித்த கட்டடத்திலிருந்து அவரை வெளியேற்றுவதற்காக கட்டட உரிமையாளர் வழக்குத் தாக்கல் செய்திருந்ததார். அதனைத் தொடர்ந்தே பொலிஸாரினால், அந்த வீடு சோதனை செய்யப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: