இலங்கை: யானைகளைக் கொன்றால் ஆயுள் தண்டனை

காட்டு யானைகள் கொல்லப்படுகின்றமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவோருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதற்கு ஏதுவான வகையில் வனஜீவராசிகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்திர ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள காட்டு யானைகளின் எண்ணிக்கை மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக வனஜீவராசிகள் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் ஆகியோர் இணைந்து ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்காக வனப்பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை மகாவலி அதிகார சபையின் களப்பணியாளர்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. -BBC_Tamil

TAGS: