வடக்கில் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு இடமில்லை – யாழ். படைகளின் தளபதி

விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வெறும் வதந்தியே,  வடக்கில் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு இடமில்லை என்பதை சிறிலங்கா இராணுவம் திடமாக நம்புகிறது என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

வடக்கில் விடுதலைப் புலிகள் மீண்டெழுவார்கள் என்ற அச்சம் தெற்கில் இருப்பது  குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர்,

“அவ்வாறான தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. அவ்வாறு அச்சம் கொள்ள வேண்டிய தேவை இல்லை.

வடக்கில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இல்லை என்பதையும்  புலிகள் மீண்டெழுவதற்கான சாத்தியங்கள் ஏதும் இல்லை என்பதையும் எமது புலனாய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆவா குழு தொடர்பான விவகாரம் தான் கடந்த சில மாதங்களில் நாங்கள் எதிர்கொண்ட பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினையாகும்.

இந்தக் குழு மதுபோதைக்கும், போதைப் பொருளுக்கும் அடிமையான இளைஞர்கள் சிலரைக் கொண்டது. அவர்கள் தென்னிந்திய படங்களைப் பார்த்து விட்டு அதனைப் போல, நடந்து கொள்ள முனைகிறார்கள்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர் எனவே எந்தக் கவலையும் இல்லை.”  என்று குறிப்பிட்டுள்ளார்.

-puthinappalakai.net

TAGS: