தனது தந்தையார் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க கொண்டுவந்த தனிச்சிங்களச் சட்டமே இலங்கை இனப்பிரச்னையின் மூலத் தவறாக அமைந்துவிட்டது என்று இலங்கையின் முன்னாள் குடியரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“தனிச் சிங்களச் சட்டத்தால் தமிழ் மக்களுக்கும் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கும் சொல்லமுடியாத அளவுக்குப் பாதிப்புக்கள் ஏற்பட்டன. அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றை அடைந்துகொள்வதில் தனிச்சிங்களச் சட்டம் பெரும் தடையாக அமைந்தது. குறிப்பாக தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் செல்வதைச் சிக்கலுக்குள்ளாக்கக்கூடிய சட்டங்கள் அனைத்தையும் ஆட்சியில் இருந்தவர்கள் நான் உட்பட கொண்டுவந்தனர். இது இனமுரண்பாடுகளை இன்னும் அதிகரிக்கச் செய்தது” என்று சந்திரிகா கூறினார்.
“இனத்துவ அடையாள அரசியல் ஒரு தவறான பாதையாகும். சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனில் பன்மைத்துவமே பயன்படுத்தக்கூடிய சிறந்த தெரிவாகும். போர் முடிந்த பின்னரும்கூட தாம் எதிர்பார்த்த எதுவுமே நடைபெறாததால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். இளைய தலைமுறையினரிடமிருந்து உருவாகக்கூடிய புதிய அரசியல் தலைமை மூலமே போருக்குப் பின்னான காலத்திலாவது இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காணமுடியும்” என்று அவர் மேலும் சொன்னார்.