தமிழ்நாட்டில், சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, பெருவெற்றியைப் பெற்றுள்ள ரிரிவி தினகரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம், இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.
கன்னியாகுமரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நத்தார் விழாவில் கலந்து கொண்ட போதே, ரிரிவி தினகரனுக்கும், சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு நடந்தது.
இந்த விழாவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்கவிருந்தார். அவர் சுகவீனமடைந்திருந்ததால், அவரது பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த நத்தார் விழாவில் பங்கேற்றிருந்தார்.
இந்த விழாவில் பங்கேற்ற ரிரிவி தினகரனுடனான சந்திப்பு குறித்து, தி ஹிந்து அங்கில நாளிதழிடம் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன்,
“பொதுக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர், சுமார் 20 நிமிடங்கள் நாங்கள் இருவரும் சந்தித்து கலந்துரையாடினோம். போருக்குப் பிந்திய சூழலில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் எப்படி உள்ளனர் என்று தினகரன் கேட்டறிந்து கொண்டார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை விட, தற்போதைய கூட்டு அரசாங்கம் சிறந்ததா என்று தினகரன் ஆதரவாளர்கள் சிலர் என்னிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு நான் இப்போதைய அரசாங்கம் பரவாயில்லை. ஆனாலும் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைத் தேடும் முயற்சிகள் இன்னமும் தொடர்கின்றன” என்று கூறினேன் எனத் தெரிவித்துள்ளார்.
-puthinappalakai.net