கேப்பாப்புலவில் 133.34 ஏக்கர் காணிகளை விடுவித்தது சிறிலங்கா இராணுவம்

முல்லைத்தீவு- கேப்பாப்புலவில், சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 133.34 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன.

கேப்பாப்புலவில் நேற்று நடந்த நிகழ்வில், முல்லைத்தீவு படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு, இந்தக் காணிகளை ஒப்படைக்கும் ஆவணத்தை, புனர்வாழ்வு புனரமைப்பு, மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலர் செந்தில்நந்தனனிடமும், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடமும் கையளித்தார்.

133.34 ஏக்கர் காணிகள், இராணுவத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட மற்றும் புனரமைக்கப்பட்ட 28 கட்டடங்களுடன் கையளிக்கப்பட்டுள்ளன.

விடுவிக்கப்பட்ட காணிகளில், 68 பேருக்குச் சொந்தமான 111.05 ஏக்கர்  காணிகள் கேப்பாப்புலவு பகுதியிலும், 17 பேருக்குச் சொந்தமான 21.84 ஏக்கர் காணிகள் சீனியாமோட்டைப் பகுதியிலும் உள்ளன.

இதற்கிடையே, கேப்பாப்புலவு பகுதியில் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் வரை- தமது போராட்டம் தொடரும் என்று, 300 நாட்களுக்கு மேலாக கேப்பாப்புலவு படைத் தளம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

-puthinappalakai.net

TAGS: