முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படைத் தளத்தை அமைப்பதற்கு 671 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விகல்ப என்ற ஊடகத்தின் ஆசிரியர் சம்பத் சமரக்கோன், எழுப்பியிருந்த வினாவுக்கு காணிகள் மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலர் தயாரத்ன அளித்துள்ள பதிலிலேயே இந்த காணி சுவீகரிப்புத் திட்டம் குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படையின் முல்லைத்தீவு பிரதான தளத்தை உருவாக்குவதற்காக என்று இந்த காணி சுவீகரிப்புக்கான உத்தரவு, பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதிலில் கூறப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில், வட்டுவாகல், வெள்ளமுள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் உள்ள 671 ஏக்கர் காணிகள் பொதுத் தேவைக்காக சுவீகரிக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், அமைச்சர் கயந்த கருணாதிலக அறிவித்திருந்தார்.
எனினும், இந்தக் காணி சுவீகரிப்பு கடற்படைத் தளத்தை அமைக்கவே என்பது, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
-puthinappalakai.net

























