அகதி முகாம்களில் மத்திய அரச அதிகாரிகள் ஆய்வு – இரட்டைக் குடியுரிமை கோரிக்கை நிராகரிப்பு

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதிகள் தங்கியுள்ள முகாம்களில் இந்திய மத்திய அரச அதிகாரிகள் குழுவொன்று தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும்  திருச்சி, புதுக்கோட்டை  மாவட்டங்களில் உள்ள கொட்டப்பட்டு, வாழவந்தான்கோட்டை, தோப்புக்கொல்லை, தேக்காட்டூர், அழியாநிலை அகதிகள் முகாம்களில் மத்திய அரசு அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மத்திய உள்துறை அமைச்சின், அகதிகள் மறுவாழ்வுப் பணிப்பாளர் பிரசாந்தஜித் தேவ், மற்றும்  மறுவாழ்வு செயலர் சதீஸ்குமார் ஆகியோர், தமிழக அரச அதிகாரிகளின் உதவியுடன் முகாம்களுக்குச் சென்று அங்கள்ள வசதிகள் மற்றும், அகதிகளின் குறைகளைக் கேட்டறிந்தனர்.

இதன்போது, அகதிகள் பல்வேறு கோரிக்கை மனுக்களையும் அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தங்கியுள்ள அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதற்கு உள்துறை அமைச்சின் அதிகாரிகள், அது சாத்தியமில்லை என்று கூறினார்.

அதேவேளை, தாயகம் திரும்பிச் செல்வதற்கு கப்பல் வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும், உள்ளூர் மக்களுக்குக் கிடைக்கும் வசதிகள் தமக்குப் பெற்றுக் கொடுக்குமாறும், பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

எனினும்  முடிவெடுக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்றும், அகதிகளின் கோரிக்கைகள் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, இராமநாதபுரம், திருநெல்வேலி, கோயமுத்தூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முகாம்களில் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-puthinappalakai.net

TAGS: