யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற 4வது உலகத் தமிழாராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 44வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.
யாழ். முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அருகில், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு ஜனவரி 03ஆம் திகதி முதல் நடைபெற்ற 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10, 1974இல் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பதினொரு பேர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்திய குழப்ப நிலையினால் மரணம் அடைந்தனர்.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தினால் நிகழ்ந்த வாகன விபத்துகள், இந்தக் குழப்பங்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட இதய வலி என்பன இந்த மரணங்களுக்குக் காரணமாயின.
-4tamilmedia.com