இராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நிலைமாற்ற நீதிமுறைமைகளின் கீழ், போர்க்குற்ற விசாரணைகள் சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்பட வேண்டும். இதன்மூலம் குற்றவாளிகளை அடையாளங் காண வேண்டும்.
நாங்கள் இராணுவத்தை ஒட்டுமொத்தமாகக் குறை கூறவில்லை. அதில் கடமையாற்றிய காவாலிகள் சிலரை அடையாளப்படுத்த வேண்டும் என்றே கேட்கின்றோம். அந்தக் காவாலிகளை வீரதீர சூரர்கள், சிங்கள மக்களின் காவல் மன்னர்கள் என்ற முறையில் மத்திய அரசாங்கத்தில் உள்ளோர் பலர் காப்பாற்ற விளைந்துள்ளார்கள். எமது நெருக்குதல்கள் காவாலிகளைக் கடைத்தெருவுக்கு இழுத்து வர வேண்டும் என்று கருதுகின்றோம். இவற்றைச் செய்ய நாம் மக்கள் இயக்கமாக ஒருங்கிணைந்து முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
எமது பார்வை சரியென்று கருதும் யாவரும் எம்முடைய மக்கள் இயக்கத்துடன் இணைந்து அரசாங்கத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நெருக்குதல்களை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உங்கள் கேள்விகளைப் பரிசீலிப்பதற்கு எழுத்து மூலமாக அவற்றைத் தருமாறு வேண்டிக்கொள்கிறேன்.” என்றுள்ளார்.
-4tamilmedia.com