நாட்டில் யுத்தம் நிறைவடைந்து நீண்ட காலமாகிய போதிலும், வடக்கில் இன்னமும் இராணுவம் நிலை கொண்டிருப்பது, தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்து வருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்தசங்கரி மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தம் இல்லாத காலத்தில் இராணுவத்தினர் வடக்கில் தங்கியிருப்பதால், தமிழ் மக்களுக்கு சொந்தமான பாரிய நிலப்பரப்பு இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் சென்றுள்ளது.
இதேவேளை எந்தவொரு காரணமும் இன்றி இராணுவத்தினர் அங்கு தங்கியிருப்பதால், அப் பகுதிகளிலுள்ள பெண்களின் சுதந்திரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நாளாந்தம் பயம் மற்றும் சந்தேகத்துடனேயே வாழவேண்டி ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் கலாச்சாரத்திற்கு இராணுத்தினர் தொடர்ந்தும் தங்கியிருப்பது பொருந்தாது. ஆகவே, எந்தவொரு காரணமும் இன்றி இராணுவத்தினர் வடக்கில் நிலை கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றுள்ளார்.
-4tamilmedia.com