மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண விரிவானதொரு செயற்திட்டதை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் நடைறைப்படுத்த உள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுத் தெரிவித்தார்.
மலையகத்தில் வீடமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சகல துறைகளையும் அபிவிருத்தி செய்து, அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக, அரசாங்கம் என்றவகையில் சகல உதவிகளும் வழங்கப்படுமென, ஜனாதிபதி நேற்று (28) பிற்பகல், தலவாக்கலைப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய ஜனாதிபதி,
சகல மக்களது பிரச்சினைகள் தொடர்பாக தமக்கு சிறந்த புரிந்துணர்வு காணப்படுவதாகத் தெரிவித்தார். இந்தப் பிரச்சினைகளைத் தெளிவாக ஆய்வுசெய்து, அவற்றுக்கு நிலையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தலே தனது நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.
தேயிலைக் கைத்தொழிலின் மேம்பாட்டுக்கான விசேட செயற்திட்டமும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, தேயிலை, தென்னை உள்ளிட்ட சகல ஏற்றுமதிப் பயிர்களினதும் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மலையக தேயிலைத் தோட்டங்களில் நீண்டகாலமாக தேயிலை மீள்நடுகை செய்யப்படாமையினால் தேசிய பொருளாதாரத்துக்கும் அப்பிரதேச மக்களது வாழ்க்கைத் தரத்திலும் ஏற்பட்டுள்ள தாக்கங்களை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேயிலை மீள்நடுகை செய்வதனைத் துரிதப்படுத்தல் தொடர்பாக தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் அரசாங்கத்தின் சகல நிறுவனங்களினதும்பங்குபற்றலோடு கலந்துரையாடப்படும் எனவும், மீள்ஏற்றுமதி காரணமாக தேயிலைக் கைத்தொழிலுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களை நீக்குவதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மலையகத்தில் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கும் விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் நீருற்றுக்களின் பாதுகாப்பு மற்றும் பிரதேச பாதுகாப்பினை உறுதிசெய்யவும் விசேட திட்டம் உருவாக்கப்படும் எனத் தெரிவித்ததுடன் ஹட்டன், தலவாக்கலை, நுவரெலியா மற்றும் கந்தப்பொல ஆகிய நகரங்களை அபிவிருத்தி செய்ய விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்தவும்ஹட்டன், டிக்கோயா மருத்துவமனையின் குறைபாடுகளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
-tamilmirror.lk